Politics
ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம் கேள்வி!
ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சி அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில், ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நாளில், ஒரே நேரத்தில் லட்ச கணக்கான மக்கள் ஈஷா யோகா மையம் கூடுகின்றனர். ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியால் வெள்ளியங்கிரி வனச்சூழல் மிகுந்த பாதிக்குள்ளவாதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடியதால் ஏற்பட்ட கழிவு நீர் வனப்பகுதிகளை மட்டுமல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மாசுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதே போல், அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவான 45 டெசிபல் ஒலி அளவை விட அதிமான அளவிலும், நிகழ்ச்சி வனப்பகுதியில் நடத்தப்படுவது விதிகள் மீறிய செயல் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஈஷாவில் முறையான கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட கோரியும், விதிகளை மீறி வனசூழலை பாதிக்கும் வகையில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சிவராத்திரி விழாவின் போது எந்த சட்ட விதிகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதிட்டார்.
ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் , தன் நிலத்தை 100 கோடி ரூபாய்க்கு வாங்க மறுத்ததால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுதாரர், ஈஷாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டும் இதே போல கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.மேலும், சிவராத்திரி விழாவின் போது எந்த விதிகளையும் மீறுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். சிவராத்திரி விழா நிகழ்ச்சிகளின் போது விதிகள் முறையாக, கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிவராத்திரி விழாவின் போது விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பிப்ரவரி 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!