Politics
“ஒன்றிய அரசால் உலகளவில் இந்தியர்கள் அவதிப்படுகிறார்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.
அதில் ஒரு பகுதியாக சென்னை வடகிழக்கு மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ் மண்ணில் இருந்து பல லட்சம் கோடி வரியை பெற்றுக்கொண்டு, கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கும் பாசிஸ்ட்டுகளின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒழியட்டும்.
ஒன்றிய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பயனற்ற, பழிவாங்குகின்ற, இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தில் useless என்று சொல்லப்படுகிற பட்ஜெட். அப்படியான பட்ஜெட்டைதான் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணிநேரம் 20 நிமிடம் வாசித்தார்.
தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல. வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சேர்த்து கல்விப் பணி செய்கின்ற திராவிட மாடல் அரசின் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2,500 கோடி நிதியை ஒன்றிய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. நாமும் தொடர்ந்து நிதியை கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
தமிழ்நாடு மக்களின் வாக்குக்காக மட்டும் தமிழ்நாட்டிற்கு வருவார் பிரதமர் மோடி. சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது 9 முறை தமிழ்நாட்டிற்கு வந்த அவர், வாக்குப்பதிவின்போது கன்னியாகுமரி பாறையில் தியானம் செய்தார். ஆனால், தேர்தலுக்கு பின் ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வந்தாரா?
புயல் சேதாரங்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கோரியது ரூ.6,675 கோடி. ஆனால், ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் ரூ. 944 கோடி. இந்த நிலை கடந்த ஆண்டில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே நிலை தான். இப்படி தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து வருகின்றது.
ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில இன்றைக்கு நம்முடைய நாட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். அதற்கு அண்மையில் கை - கால்களில் விலங்கிட்டு இந்தியா வந்தடைந்த இந்தியர்களே உதாரணம்.
வேலைவாய்ப்பில் தோல்வி, பொருளாதாரத்தில் தோல்வி, வெளியுறவுக் கொள்கையில் தோல்வி. ஏதாவது ஒன்று, இரண்டு பாடத்தில் தோல்வியடையலாம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளது” என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!