Politics
வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து தி.மு.க எம்.பி.க்கள் இடைநீக்கம்! : ஆ.ராசா கண்டனம்!
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்களால் வக்ஃப் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுவதற்கு முன்பே, அதன் சில வரையறைகள் பொதுவெளியில் கசிந்தன. இதனால், மசோதா முன்மொழிவிற்கு முன்பே, இம்மசோதா இஸ்லாமியர்களின் உரிமை பறிப்பு மசோதா என கண்டனங்கள் வலுத்தன.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதற்கு பிறகும், நிலை மாறவில்லை. எனவே, இதற்கென தனியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு நிறுவப்பட்டு, அதில் தி.மு.க சார்பில் ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா போன்றோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு தொடங்கப்பட்டு, அதற்கான திறனாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வரும் வேளையில், அதில் பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளை முன்னிறுத்தி வருகிற ஒன்றிய பா.ஜ.க அரசின் போக்கு கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
அதற்கு, எதிராக இன்றைய (ஜனவரி 24) வக்ஃப் மசோதா கூட்டுக்குழு கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா மற்றும் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் சார்பில் வக்ஃப் மசோதா குறித்து அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் சென்று கருத்து கேட்டு வருகிறோம். அவ்வாறு மாநில தலைநகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகிற பொழுதே, அவசர அவசரமாக திருத்தங்களை வழங்க ஒன்றிய அரசு வலியுறுத்தியது.
நடைமுறைக்கு மாறாக ஒன்றிய அரசின் செயல்பாடு இருக்கின்ற போதிலும், இஸ்லாமியர்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வக்ஃப் மசோதாவில் இடம்பெற வேண்டிய திருத்தங்களை வழங்க டெல்லி வருகை தந்தோம். இந்நிலையில், திருத்தங்கள் கேட்கப்படும் என்ற அறிவிப்பை இறுதி நிலையில் மாற்றியது நாடாளுமன்ற கூட்டுக்குழு.
இவ்வாறு, ‘நாள் மாற்றம், நடவடிக்கை மாற்றம் என அனைத்தும் அவசர அவசரமாக நடத்தப்படுவது ஏன்?’ என கேள்வி எழுப்பினோம். ஏப்ரல் மாதம் வரை மசோதா திருத்தம் செய்ய காலம் இருந்தும், 10 நாட்களில் வரக்கூடிய டெல்லி தேர்தலுக்கான ஆதாயமாக இதனை பயன்படுத்த எண்ணுகிறதா ஒன்றிய அரசு என்ற கேள்வியும் இதன் வழி எங்களுக்கு எழுகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!