Politics
“கேள்வி கேட்க ஆள் இல்லாத இடத்தில் அலங்காரமாக பேசுகிறார் பிரதமர் மோடி!” : திருச்சி சிவா கண்டனம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக, இந்திய அரசமைப்பு சட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து திருச்சி விமான நிலையம் வந்தடந்த தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம், சம்பல் உள்ளிட்ட எந்த பிரச்சனையை எழுப்பினாலும், பிரதமர் அவைக்கு வந்து பதில் சொல்வதில்லை. அவையில் எதிர்க்கட்சியினரை பேசக்கூட அனுமதிப்பதுமில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகம் முற்றிலும் அகற்றப்படுகிறது. ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டும் தான் நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இடம் பெறுகிறது. மற்றவர்கள் பேசினால், மைக் அணைக்கப்படுகிறது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் அமளி செய்வது போன்ற தோற்றம் மட்டுமே அவைக்கு வெளியே பொதுமக்களிடம் பரப்பப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து பேசியதில்லை.
ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட அவசர நிலை (எமர்ஜென்சி) இருந்தது. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நடைமுறையில் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
ஜாமினில் வெளிவர முடியாத வகையிலான வழக்குகளில் பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் அதிகளவு கொல்லப்படுகிறார்கள்.
மணிப்பூரில், 200க்கும் மேற்பட்ட நாட்கள் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானோர் முகாம்களில் இருக்கின்றனர்.
இதற்கு பதில் சொல்ல வேண்டிய, இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய, மணிப்பூர் பாஜக முதலமைச்சரும், பிரதமரும் மவுனம் சாதிக்கிறார்கள். இவர்கள் கேள்வி கேட்க ஆள் இல்லாத இடத்தில் அலங்காரமாக பேசுகிறார்கள்.
பல மொழிகள், பல பண்பாடு, பல கலாச்சாரம் உள்ள நம் நாட்டில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியம் இல்லை. இதனை எதிர்ப்பது எங்களது கடமை. இதை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போதும் கூட்டணி அரசு தான் உள்ளது. கூட்டணியில் இருந்து சிலர் எப்போது விலகினால் இந்த ஆட்சி கலைக்கப்படும்.
மாநில அரசுகளை கலைப்பதற்கான, 356வது சட்டப்பிரிவு இருக்கும் வரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியமில்லை. கூட்டு நாடாளுமன்ற குழு கருத்து கேட்க அமைக்கப்பட வேண்டும். அங்கு எங்களது கருத்தை சொல்லுவோம்.
தற்போது மழை வெள்ள நிவாரணமாக, 2,662 கோடியை தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. அதில், 900 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இதுவரை வெள்ள நிவாரணமாக, மொத்தம், 37 ஆயிரத்து 900 கோடி கேட்டுள்ளது.
அதில், 267 கோடி மட்டுமே கொடுத்துள்ளார்கள். மாநில உரிமைகளை கேட்டு பெறுவதில் எந்த காலத்திலும் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது” என்றார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?