Politics
ராமதாசு மற்றும் அன்புமணி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் : திமுக MLA-க்கள் வழக்கறிஞர் நோட்டீஸ் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து பாமக முக்கிய தலைவர்களான இராமதாசு மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இராமதாசு மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது திமுக எம்.எல்.ஏக்கள் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் டி. உதயசூரியன் (சங்கராபுரம் தொகுதி) மற்றும் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம் தொகுதி) ஆகியோர் பி.வில்சன் அசோசியேட்ஸ் மூலமாக அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸில், "மருத்துவர் இராமதாசு அவர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் இந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !