Politics
சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது : பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு !
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் சந்தேஷ்காளி என்ற கிராமத்தில் நில அபகரிப்பு செய்ததாகவும், அதோடு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தை கையில் எடுத்த பாஜக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆயுதமாக இதனை பயன்படுத்தியது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்லாத பிரதமர் மோடி இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்களை நேரில் சந்தித்தார். அதோடு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட ரேகா பத்ரா என்பவரை பாசிர்ஹத் மக்களவைத் தொகுதி வேட்பாளராகவும் பாஜக களமிறக்கியது.
இந்த நிலையில், சந்தேஷ்காளியில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் பாஜகவால் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் சிரியா பர்வீன் கூறியுள்ளார். சந்தேஷ்காளி விவகாரத்தில் போராட்டங்களை முன்னெடுத்தவரில் முக்கியமானவராக கருதப்பட்ட சிரியா பர்வீன் அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "சந்தேஷ்காளியில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் பாஜகவால் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதுதான். சந்தேஷ்காளி விவகாரத்தில் பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுக்கு பெருமளவில் பணம் கைமாறியது. சந்தேஷ்காளியில் நடைபெற்ற பல வன்முறை சம்பவங்கள் பாஜக-வால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதை நிரூபிக்க முடியும்"என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாஜகவினர் தன்னை மிரட்டி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட கூறியதோடு, பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!