Politics

"பாஜகவின் தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல்"- நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம் !

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து யார் யார் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது குறித்த விவரத்தையும் SBI வெளியிட்டது

இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கூறியுள்ளார். பொருளாதார நிபுணராக பரகலா பிரபாகர், தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், " தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்

வரும் காலத்தில் தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட அதிக வேகம் பெறும். இது ஒரு முக்கிய பிரச்னையாக மக்கள் புரிந்துகொள்வார்கள். நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியா கூட்டணி - பாஜக இடையேயானது அல்ல. நடக்கும் தேர்தல் பாஜக - இந்திய மக்களுக்கு இடையேயானது. பாஜக அரசை இந்தியி மக்கள் தண்டிப்பார்கள்"என்று கூறியுள்ளார்.

Also Read: இது கூட தெரியாதா ? தவறான முத்திரைத்தாளில் வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை- நிராகரிக்காத தேர்தல் ஆணையம்!