Politics
பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ விமர்சனம் !
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இங்கு தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதிமுக அறிவித்திருந்த நிலையில், தங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவேண்டும் என அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கேட்கப்பட்டிருந்தது.
அங்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. அங்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்று வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள்.இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது.
பா.ஜ.க வை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது.
தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்து விட்டோம்.ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள்.ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை.பா.ஜ.க வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்க கூடாது என்பதற்காக பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆனையம் செயல்படுகிறது.
அதிமுக பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.க விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
-
சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!
-
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!