Politics

மக்கள் நடமாட்டம் நிறைந்த ‘அல்துவானி’ பகுதியை அமைதியாக்கிய பாசிச பா.ஜ.க!

சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், சிறுபான்மையினர் எக்கேடு கெட்டால் நமக்கேன்ன என்ற ஏளனத்துடன் உத்தராகண்ட் அரசும், அரசு அதிகாரிகளும் செய்பட்டதன் விளைவே, அல்துவானி நிகழ்வு!

உத்தராகண்ட் மாநிலத்தின்‘அல்துவானி’ என்ற இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி ஒரு வணிகம் சார்ந்த பகுதியாக இருந்து வந்தது. அப்பகுதியில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த மசூதி மற்றும் இஸ்லாமிய கல்விச்சாலை அமைந்துள்ள இடம் அரசிற்கு உரிமையானது என எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் அவ்விடங்களை இடிக்க முற்பட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கைமாற்றப்பட்ட அவ்விடத்திற்கு எழுத்துருவில் ஆதாரம் இல்லை என்பதனை தெரிந்துகொண்டு, சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு, இஸ்லாமிய புனித இடங்களை கைப்பற்ற எண்ணியது இந்துத்துவ பா.ஜ.க. இந்த நிலையை அறிந்து அல்துவானி பகுதியைச் சேர்ந்த மக்கள், மசூதி மற்றும் கல்விச்சாலையை இடிக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.

எனினும், அதனை காதில் போட்டுகொள்ளாத அதிகாரிகள் இடிப்பு வேலையை செய்துகொண்டிருந்தனர். அருகில் இருந்த காவலர்கள் தடியடி நடத்தியும், பின்பு துப்பாக்கிச்சூடு நடத்தியும் மக்களை குறிப்பாக பெண்களை விரட்டியுள்ளனர். எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், வீட்டில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வன்முறைக்கு மக்கள் தான் காரணம் என சுமார் 42 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அறிக்கையின் படி 5 பேர் இறந்துள்ளனர். ஆனால், அதற்கு மேல் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அல்துவானி பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநில பா.ஜ.க அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பாமல், அல்துவானி பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்களான பால், காய்கறி மற்றும் இதர பொருள்களுக்காக கூட வீட்டை விட்டு வெளியேற இயலாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.