Politics

“உலகம் அதிர சொல்வோம், ’தமிழும் திமிலும்’ எமது பேரடையாளம்” - நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவதல் உள்ளிட்ட போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மாடுபிடி வீரர்கள் தயாராகி வந்தனர். இந்த சூழலில் கடந்த ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று @tskrishnan என்ற இணையவாசி ஒருவர் ஜல்லிக்கட்டு சங்க கால தமிழ் இலக்கியங்களில் ஹிந்து பண்டிகை விழாவாக இருந்தது என்று நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழர் விழாவை ஒரு மதம் சார்ந்த விழாவாக சித்தரித்த இவரது பதிவை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு, அவரும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “சங்கக் கால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. அந்த கால மக்களின் வாழ்க்கையை இன்று வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு : “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். ‘தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்’ என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்... கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்.”

Also Read: “சிறு தவறும் இல்லாமல் இளைஞரணி மாநாட்டை நடத்திக்காட்ட வேண்டும்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !