Politics
"மக்கள் பிரதிநிதிகளுக்குதான் உண்மையான அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு அல்ல" - உச்சநீதிமன்றம் அதிரடி !
இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், பஞ்சாப் அரசும் இதுபோன்ற ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை காலம் என்ன செய்தார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல ஆளுநர்கள். உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் இதில் நடவடிக்கை" என கடுமையாக கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இணையதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதில், "ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசின் சட்டமியற்றும் வழக்கமான போக்கைத் தடுக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குதான் உண்மையான அதிகாரம் உள்ளது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் முடிவெடுத்தால், அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்காக அவர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
சட்டசபை கூட்டத்தின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவது ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல. மசோதாவை பரிசீலிக்கவும், சில மாற்றங்களையும் கூட ஆளுநர் யோசனையாக அளிக்கலாம். ஆனால் அதை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் சட்டசபையின் முடிவு.”கூடிய விரைவில்” என்கிற வார்த்தைப் பிரயோகம் முக்கியத்துவம் வாய்ந்தது. மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது அந்த பிரயோகத்துக்கு புறம்பானது. மசோதாக்களை கிடப்பில் போட்டு வைப்பது, நாடாளுமன்ற நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசன ஜனநாயகத்துக்கு விரோதமானது.
அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் அதிகாரத்தை, அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் ஆளுநர் செயல்படுத்த முடியும். ஜனநாயக அமைப்பின் செயல்பாடு, மக்களால் நம்பி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செயல்பட முடியாதபோது பாதிக்கப்படுகிறது. ஆளுநர் கொண்டிருக்கும் அரசியல் சாசன அதிகாரங்களால் சட்டசபை இயக்கத்துக்கு அவர் இடையூறு விளைவிக்க முடியாது. அரசியல் சாசனம், நாடாளுமன்ற அரசாங்க முறையைத்தான் முன் வைக்கிறது; ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க முறையை அல்ல" என்று குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!