Politics

"பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர அனைத்திலும் இந்தியா வென்றது" - மம்தா பானர்ஜி விமர்சனம் !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியை பார்க்க மைதானத்துக்கு மோடி வந்ததும், அவர் பெயரிலான மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்ததுமே காரணம் என சமூக வலைதளத்தில் ஏராளமானோர் விமர்சித்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ”உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியா வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது.அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் தோன்றி இந்து முஸ்லிம் என பேசிக் கொண்டிருப்பார். திடீரென கிரிக்கெட் பார்க்க நேரில் செல்வார். ஆனால், நிச்சயம் இந்திய அணி தோற்றுவிடும். அவர் அப்படிப்பட்ட அபசகுனம் பிடித்தவர்” என்று யார் பெயரையும் கூறாமல் விமர்சித்திருந்தார்.

ஆனால், அவர் மோடியை குறிப்பிட்டுதான் அவ்வாறு கூறியதாக பாஜக விமர்சித்திருந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ராகுல் காந்தி போல விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ""ஐசிசி உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் அதில் இந்தியா வெற்றிபெற்றிருக்கும். இந்திய அணி தொடர் முழுக்க மிகவும் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர.

சிலர் குங்குமப்பூ பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். அவர்கள் முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். எங்கள் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தையும் குறிப்பிட்டு அவரை மோடியைதான் சொல்கிறார் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: பல ஆண்டுகள் திட்டம் : பாஜக, BCCI-யின் அரசியல் அழுத்தத்துக்கு பலியானதா இந்திய அணி ? ஒரு பார்வை !