Politics

“பாஜகவின் ரவுடிகள் பட்டியலை ஆய்வு செய்வீர்களா?” - ஜெ.பி.நட்டாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி !

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கானத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வீட்டு முன் சுமார் 45 அடி உயரமுள்ள பா.ஜ.க கட்சியின் கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தைச் சென்னை பெருநகர நகராட்சியினரும், போலீசாரும் அகற்ற கடந்த 21-ம் தேதி முடிவு செய்தனர். அப்போது, பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இவர்களை போலிஸார் பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள். இதனால் போலிஸார் அவர்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த JCB இயந்திரத்தைக் கற்களைக் கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்குச் சேதம் விளைவித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார் உள்ளிட்ட 6 பேரை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அந்த கொடி கம்பம் அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவினர் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று குழு பாஜக தேசிய தலைவரான ஜெ.பி. நட்டா கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாஜகவின் இணைந்துள்ள குற்றச் செயல்களில் பெயர் போன ரவுடிகளின் பட்டியலை ஆய்வு செய்வீர்களா? என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில்,"தமிழகத்தில் பாஜகவினர் கைது குறித்து ஆய்வு செய்ய ஜே.பி.நட்டா குழு அமைத்துள்ளார்! இந்தக் குழு பிஜேபியில் இணைந்துள்ள குற்றச் செயல்களில் பெயர் போன ரவுடிகளின் பட்டியலை எடுத்து அவர்கள் குற்றப் பின்னணியை விசாரித்து மக்கள் மன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “நாட்டு மக்களை பிளவுபடுத்திய கூட்டத்தை சேர்ந்தவர் ஆளுநர்” - அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு !