Politics
அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக நடக்கிறார் ஆளுநர் RN ரவி.. வைகோ கடும் கண்டனம் !
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், நீட் இளநிலைத் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் சுமார் 100 பேரை அழைத்து அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார். இந்தக் கூட்டத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவியின் தனத்தை அம்மாசியப்பன் என்பவர் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சார்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். எனவே நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் என ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆளுநர் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக அம்மாசியப்பனை நோக்கி உட்காருங்கள் என மிரட்டி அவரிடம் இருந்த மைக்கை பறித்தனர். பின்னர் பேசிய ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூற அங்கிருந்த பெற்றோர்கள் ஆளுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி-யும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ‘எண்ணித் துணிக' என்னும் தலைப்பில் ஆளுநர் ரவி நடத்தி வரும் கலந்துரையாடலில் ‘நீட்' தேர்வில் முதல் 100 இடங்களைப் பெற்ற தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் நேற்று ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி என்பவர், ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்களின் பெற்றோர் அதிகம் செலவளிக்க வேண்டியுள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் அவர் ‘நீட்' தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவரிடமிருந்து ஒலி பெருக்கிப் பறிக்கப்பட்டதாகவும், அவரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதாகவும் கூறுப்படுகிறது.
பின்பு அந்த பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளிக்கும் போது, “நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியிலில் உள்ளது. ‘நீட்’ தேர்வு ரத்து மசோதா, குடியரசுத்தலைவரிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என்று ஆணவத்துடன் கொக்கரித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதவை கையெழுத்து இட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் ஆர். என். ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும்.
ஏற்கனவே ஆளுநரை நீக்கக் கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தி வருகின்றது. ஆளுநரின் இந்த ஆணவப்பேச்சு அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!