Politics

நாடாளுமன்றத்திற்கு வராத மோடியை வரவழைத்துப் பேச வைத்தது எதிர்க்கட்சிகளின் வெற்றி.. -கி.வீரமணி அறிக்கை !

ஆட்சிக்கு வரும்முன் மோடி அள்ளி வீசிய வாக்குறுதிகளின் இன்றைய நிலை என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசுமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்.கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் - இரு அவைகளின் கூட்டத் தொடர்கள் நடந்து வருகின்றன என்றாலும், மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வந்து பதில் அளிக்காததால், நாடாளுமன்றத்தில் தொடர் அமளி!

நாட்டின் நல்லவர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மணிப்பூர் மாநிலம் கடந்த 3 மாதங்களுக்குமேல் பற்றி எரிகிறது; சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, தீ வைப்பு, கொலை, கொள்ளை மற்றும் இராணுவ முகாம்களிலிருந்து, காவல் நிலையங்களிலிருந்து துப்பாக்கிகள் எடுத்துச் செல்லப்பட்டு, கலகக்கார்கள் நடத்துகின்ற கலவரம் - துப்பாக்கிச் சூடுகள் தொடரும் வேதனையான அவலம்; இத்தகைய கொடுமைகளுக்கு உச்சமாக 3 பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு - கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியாகி, அவர்களை நிர்வாணமாக்கிய கொடுமை கண்டு நாட்டின் நல்லவர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். காவல்துறை சரியாக இயங்கவில்லை; முறையாக வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை - பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகளின் நிலை என்ன? என்று உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மணிப்பூர் கொடூரங்களுக்கு நீதி வழங்க மனிதாபிமான பச்சாதாபத்துடன் கடமையாற்றிவரும் நிலையிலும், பிரதமர் மோடி அவர்கள், மணிப்பூருக்குச் சென்று நேரில் அம்மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தவில்லை. நாடாளுமன்றத்திற்குப் பிரதமர் வந்து, இதுபற்றிய மக்கள் - எதிர்க்கட்சிகளின் கவலையை, அச்சத்தைப் போக்கி, நிலைமைகளுக்கு உத்தரவாதம் தருவதுதானே நியாயம்?

அவர் தொடர்ந்து வராது இருந்த நிலையில், அவரது மவுனத்தைக் கலைத்து, அவரை நாடாளுமன்ற அவைக்கு வரவழைக்கும் ஓர் உத்தியாகவே - ஏற்பாடாகவே அவரது ஆட்சியின்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற ஒன்றினை ஒரு வேலைத் திட்டம்போல் செய்தனர்.வராதவரை, வர வைத்தனர்; பேசாதவரை, பேச வைத்தனர். பா.ஜ.க.விற்கு - ஆளும் கட்சிக்கு உள்ள ‘புல்டோசர்’ மெஜாரிட்டி எண்ணிக்கை காரணமாக அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்கும் என்பதைத் தெரிந்தே இதைக் கொண்டு வந்தனர்! ‘‘அவைக்கு என்னை வரவழைக்கவே இத்தீர்மானம்‘’ என்று தனது பதிலுரையில் பிரதமரே ஒப்புக்கொண்டார்.

இது ஒரு கொள்கை வெற்றி! இது இந்திய ஜனநாயகத்திற்குப் பெருமையா? இதில் யாருக்கு வெற்றி - எதிர்க்கட்சி அணியினருக்கா? ஆளுங்கட்சியினருக்கா? என்றால், எண்ணிக்கை பலன் கணக்குப்படி ஆளுங்கட்சிக்கு இது வெற்றி! ஆனால், ஜனநாயகத்திற்குப் புத்துயிர் தரும் முயற்சியைப் பொறுத்தவரை மேற்கொண்டவர்களுக்கு இது ஒரு கொள்கை வெற்றி! மணிப்பூர்பற்றி பிரதமர் மோடி, அதிக நேரம் விரிவாகப் பேசி, விளக்கம் தந்து, அங்குள்ள மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஏதும் கூறாது, பொத்தாம் பொதுவில் கூறிய சம்பிரதாய பதிலாகத்தான் அவரது விளக்கம் இருந்தது - நாட்டு மக்களுக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது! தனது இரண்டரை மணிநேர உரையில் பெரிதும் காங்கிரசையும், தி.மு.க.வையும்பற்றியே, பிரதமர் குற்றஞ்சாட்டிப் பேசினார். பல பிரச்சினைகளுக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்று அடுக்கினார்!அதற்கு ஒரே பதில் - நியாயமான கேள்விமூலம் கிடைக்குமே!

அதனால்தானே அவர்களை மக்கள் மாற்றிவிட்டு, உங்களது ‘சப்கா சாத் - சப்கா விகாஸ்; சப்கா விஸ்வாஸ்’ இவற்றையெல்லாம் நம்பி தேர்தல்மூலம் உங்களைத் தானே ஆட்சியில் அமர வைத்தார்கள்!

கொடுத்த வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை?

2014 இல் தேர்தலின்போது பேசிய நீங்கள் (நரேந்திர மோடி) ‘‘60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை, செய்யத் தவறியதை நான் ஆறே ஆண்டுகளில் செய்து சரிப்படுத்துவேன்’’ என்று தேர்தல் மேடைகளில் முழங்கி, ஒருமுறை அல்ல; இரண்டு முறை இடங்கள் அடிப்படையில் பெருத்த மெஜாரிட்டி பெற்றும் (37 சதவிகித வாக்குகள்தான் என்பது ஒருபுறம் இருந்தபோதிலும்கூட) ஏன் செய்யவில்லை - கொடுத்த வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை? வேலை வாய்ப்பு வழங்கப்படும், விலைவாசி ஏற்றம் குறையும், விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்புப் மடங்கு பெருகும்; குறைந்தபட்ச விளைபொருள் விலை நிர்ணயம் (MSP); தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு ஆகியவை என்னாயிற்று? பிரதமராக இருப்பதால், கச்சத்தீவை மீட்குமாறு உங்களைத்தானே கேட்க முடியும்? முதலமைச்சர்கள் நேரடியாக செயல்பட முடியாதே!

‘‘காங்கிரஸ் செய்ததா? காங்கிரஸ் காலத்தில் சரிப்படுத்தப்படவில்லை’’ என்று குற்றம் சுமத்தினாரே!

ஒரு கேள்வி, இடையில் உங்களுக்குமுன் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் இருந்தபோது, அந்த பா.ஜ.க. அரசு காலத்தில் மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்புத் தர முடிந்ததா? காங்கிரசை வீழ்த்திட்டபோதுகூட ஏன் செய்யத் தவறினீர்கள்?

உங்களது 9 ஆண்டுகால ஆட்சியில், ஆட்சிக்கு வரும்முன்பு மீனவர்களுக்கு நீங்கள் ஊட்டிய நம்பிக்கை நிறைவேற்றப்படவில்லையே என்றுதான் தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் என்ற முறையில் உங்களுக்குக் கடிதம் எழுதி கோரிக்கை வைக்கிறார்? அதுதானே அரசமைப்புச் சட்ட முறை.

தமிழ்நாடு மீதும், தி.மு.க.மீதும் குற்றம் சுமத்தி பிரதமரும், சில அமைச்சர்களும் பேசுவதுபற்றியும், வாரிசு அரசியல்பற்றியும் எங்கெங்கெல்லாம் காங்கிரஸ் எதிர்க்கட்சி இல்லை என்பதுபோல், எங்கெங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சி மாநிலங்களில் இல்லை என்பதைப்பற்றியும் நாளை விளக்குவோம்.

எதிர்க்கட்சியினருக்கு இது ஒரு கொள்கை வெற்றி!

கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்ததற்கு, அதன் ‘‘40 சதவிகித ஊழல்’’ என்ற காரணமும் முக்கியம் என்பதை வசதியாக மறக்கலாமா?உங்கள் மவுனம் கலைந்தது - நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சம்.

விவாதம் வெற்றிகரமாக நடந்தது என்பதால் - எதிர்க்கட்சியினருக்கு இது ஒரு கொள்கை வெற்றியாகும்!

Also Read: 'இந்தியா' என்ற பெயருக்கு பதில் 'பாரத்' - சட்டங்களின் பெயர்களை மாற்ற புதிய மசோதாவை தாக்கல் செய்த பாஜக !