Politics

அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் அதிகாரத்தைக் காட்டுவோம் - பாஜகவை மிரட்டிய கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். அதோடு எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர், பிரியங் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ் ,ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜராகிகோலி ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததும் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத திட்டங்களை திரும்பப்பெற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் பாஜகவினர் விமர்சித்து வந்த நிலையில், ஒருவேளை கர்நாடகாவில் அமைதி சீர்குலைக்கப்பட்டால் அதை செய்வது பஜ்ரங் தளா? ஆர்.எஸ்.எஸ்ஸா என்பதையெல்லாம் பார்க்க மாட்டோம். அது ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் அல்லது யாராக இருந்தாலும் தடை விதிப்போம். இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சிரமமாக இருந்தால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தேசிய செயலாளர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங் கார்கே பதிலடி கொடுத்திருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்ற ரீதியில் பாஜகவினர் தொடர்ந்து கூறி வந்தனர். இந்த நிலையில், அதற்கு ட்விட்டர் மூலம் கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவரின் பதிவில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடைசெய்ய பா.ஜ.க-வினர் தொடர்ந்து சவால் விடுத்து வருகின்றனர். இப்போது ஒரே ஒரு முறை, அமைதியைச் சீர்குலைக்க முயற்சி செய்யுங்கள். இறந்த உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்யுங்கள். அரசியலமைப்புக்கு விரோதமான செயலைச் செய்யுங்கள். அப்போது பாபா சாஹேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் அதிகாரத்தைக் காட்டுவோம்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

Also Read: ஆன்லைன் மூலம் அறிமுகம்.. வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. குஜராத் வரவழைத்து நடந்த கொடுமை !