Politics
”ஆவின் தயிரில் தமிழுக்கு பதில் இந்தியில் அச்சிட முடியாது”- ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு அமைச்சர் பதில் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ மற்றும் போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூகவலைத்தளங்களில் இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கர்நாடக அரசின் நந்தினி சார்பாக இதற்கு விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ என்றே தொடர்ந்து குறிப்பிடப்படும்” என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Also Read
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!