Politics

குடியரசு நாடுகளுக்கும் பிறநாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரு நாட்டுக்கு குடியரசு ஏன் முக்கியம் ?

இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியா தனது 73-வது குடியரசுத் தினத்தை கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இந்திய குடியரசு தலைவர் ஏற்றுவார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தேசியக் கொடியேற்றும் நிகழ்வு கொண்டாடப்படும் குடியரசு தின நாளில், அதன் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்த செய்திகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது நமது தலையாய கடமையாகும்.

ஒரு நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தனிப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தையும் கொண்டிருந்தால் அது குடியரசு நாடு என்று அழைக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு நிலவர படி இறையாண்மை கொண்ட 206 நாடுகளில் 169 நாடுகள் தங்களை குடியரசு நாடுகள் என அழைத்துக்கொள்கின்றன.

குடியரசு நாடுகளிலும் சில வேறுபாடுகள் உள்ளன. சில நாடுகள் முழுக்க முழுக்க அதிபர் ஆட்சியை கொண்ட குடியரசு நாடுகளாகவும் (அமெரிக்கா, பிரேசில்), சில நாடுகள் அரை அதிபர் ஆட்சி கொண்ட குடியரசு நாடுகளாவும் (ரஷ்யா, ஸ்பெயின் ) சில நாடுகள் நாடாளுமன்ற ஆட்சியை கொண்ட குடியரசு நாடுகளாகவும் திகழ்கின்ற (இந்தியா, பாகிஸ்தான்).

குடியரசு இல்லாத பிற நாடுகள் மன்னரை ஆட்சியாளராக கொண்ட மன்னராட்சி நாடுகளாகவும் அல்லது ஒரே கட்சியின் ஆட்சியை கொண்ட நாடுகளாகவும் திகழ்கின்றன. காலனியாதிக்க ஆட்சி காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உலகத்தின் பல்வேறு நாடுகளை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. பின்னர் முதலாம் மற்றும் இரண்டாம் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் சுதந்திரம் அடைந்தன. அதில் பல நாடுகள் தங்களுக்கு என்று தனி அரசியலமைப்பு சட்டத்தையும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் கொண்டு வந்து குடியரசு நாடுகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டன.

ஆனால், சில நாடுகள் தங்களின் காலனியாதிக்க சுவடுகளை கைவிடாமல் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையே தாங்களும் தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்தன. குறிப்பாக ஒரு காலத்தில் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் இருந்தன.

british Empire

இந்த நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் பிரிட்டனிடமிருந்து டொமினியன் அந்தஸ்தை (தன்னாட்சி ) பெற்றன. ஆனால் இந்தியா, எகிப்து போன்ற பல்வேறு நாடுகள் பிரிட்டனிடமிருந்து டொமினியன் அந்தஸ்தை பெற்றதோடு இல்லாமல் முழு சுதந்திரத்துக்காக தொடர்ந்து போராடின. இதன் காரணமாக அந்த நாடுகள் பிரிட்டனிடமிருந்து முழு சுதந்திரத்தை பெற்றன. பின்னர் தங்களுக்கு என்று தனிப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி குடியரசு நாடுகளாக தங்களை அறிவித்துக்கொண்டன.

ஆனால் ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் முழு சுதந்திரத்தை எதிர்பார்க்காமல் பிரிட்டனிடமிருந்து டொமினியன் அந்தஸ்து மட்டுமே போதும் என பிரிட்டனின் மன்னரை தலைமையாகக் கொண்ட அரசியலமைப்பை உருவாக்கி கொண்டன. இதன் காரணமாக இந்த நாட்டின் முதன்மை அரசியல் தலைவராக தற்போதும் பிரிட்டனின் அரசர், அரசியே திகழ்கின்றனர்.

newzealand flag

மேலும், தங்கள் நாட்டின் கொடியில் பிரிட்டனின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் விதமாக பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடியையும் பொறித்துள்ளன. இந்த நாடுகளுக்கு பிரிட்டனின் அரசர், அரசியால் நியமிக்கப்படும் கவர்னர் ஜெனரலே அரசின் தலைவராக நீடிக்கிறார் (நம் நாட்டின் குடியரசு தலைவர் போல ).

இன்னும் இந்த நாடுகள் டொமினியன் அந்தஸ்து கொண்டு பிரிட்டனின் மேலாண்மைக்கு கீழே இருப்பதால் அந்த நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கும் உரிமையும் பிரிட்டன் அரசர்,அரசிக்கு வழங்கப்பட்டுள்ளது. (இதுவரை அந்த உரிமையை எந்த பிரிட்டன் அரசர்,அரசியும் பயன்படுத்தவில்லை )

australian flag

எனினும் இந்த நிலை சிறிது சிறிதாக மாறிவருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பல நாடுகள் பிரிட்டனின் மேலாண்மையை துறந்து குடியரசு நாடுகளாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு கூட கரீபியன் கடல் பகுதியையொட்டி அமைந்திருக்கும் ‘பார்படோஸ்’ என்ற நாடு தங்கள் நாட்டின் தலைவர் பதவியிலிருந்த மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை நீக்கிவிட்டு, புதிய குடியரசு நாடாக தன்னை அறிவித்தது.

தற்போதைய நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்ததைத் தொடர்ந்து பிரிட்டனின் தலைமை பொறுப்பை உதறி தங்களை குடியரசாக பல்வேறு நாடுகளும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கரீபியன் நாடுகளான பெர்முடா, ஆண்டிகுவா போன்ற நாடுகள் பிரிட்டன் மன்னரின் அதிகாரத்தை தொடரலாமா அல்லது குடியரசாக மாறலாமா என வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் புதிய மன்னர் சார்லசை தங்கள் மன்னராக ஏற்பதாக அறிவித்துள்ளது . இதற்கு அவர்களின் வெள்ளை நிற பாசமும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சுதந்திர தினம் இருக்கும்போது குடியரசு தினத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் ?” - ஒரு சிறப்பு பார்வை !