Politics
சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரம்மாண்ட பேரணி.. முண்டியடித்த தொண்டர்களில் 8 பேர் பரிதாப பலி !
ஆந்திர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி இருக்கிறது. இந்த கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அம்மாநில ஆளுங்கட்சிக்கு எதிராக 'இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)' என்று சாலை பேரணி ஒன்று அறிவித்திருந்தார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
பேரணியின் ஒரு பகுதியாக நேற்று நெல்லூர் மாவட்டத்தில் கந்துகூர் நகரில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் கூட்ட நெரிசல் அலைமோதியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் சந்திரபாபு நாயுடுவை காண முண்டியடித்தனர்.
இந்த நெரிசல் நேரமாக ஆக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைந்து, அதனுள் தொண்டர்கள் பலரும் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு படுகாயமடைந்த சிலர் உள்ளூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தின் காரணமாக தனது கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்ததுடன், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2024-ம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்