Politics

“ஒருபக்கம் 10 லட்சம் கோடி தள்ளுபடி.. மறுபக்கம் இலவச அரிசி, கோதுமை நிறுத்தும்” : மோடியை சாடிய யெச்சூரி!

மோடி அரசு, தனது கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் பல லட்சம் கோடி வரிச்சலுகைகளும் அள்ளி தந்தது. அந்த தொகையில் இந்த இலவச உணவுத் திட்டத்தை பல ஆண்டுகள் தொடர்ந்திருக்க முடியும் என சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி, கோதுமையை நிறுத்துகிறது மோடி அரசு. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 2011-ஆம் ஆண்டிற்குப் பின் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தாத நிலையில், இந்தியா உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மோடி கூறுகிறார்.

அதே நேரத்தில் பல கோடிப் பேரின் வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க முடிவு செய்துள்ளது அவரது அரசு. இந்தாண்டு டிச.31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டம். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தபோது அமலுக்கு வந்தது.

அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தலா ஒருவருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது. 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இதுவரை 47 பில்லியன் டாலர் செலவளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 81.35 கோடி மக்கள் ஒவ்வொரு மாதமும் ஐந்து கிலோ உணவு தானியங்களை இலவசமாகப் பெற்று வந்தனர்.

இது குறித்து ஒன்றிய உணவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதார நிலைமையும் மேம்பட்டுவிட்டது. எனவே 28 மாதங்கள் நடை முறைப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் முடிவுக்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.

ரூ. 2லட்சம் கோடியாம்

அதே நேரத்தில், அரிசி கிலோ ரூ.3, கோதுமை கிலோ ரூ.2, மற்றும் பிற உணவு தானியம் கிலோ ஒன்று ரூ.1 விலையில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாம். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் சுமார் 81.35 கோடி மக்களை உள்ளடக்கியது. இம்மக்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்க ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்கிறது ஒன்றிய அரசு.

பசிக்குறியீடு பொய்யாம்!

2013-ஆம் ஆண்டு உணவுப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு வழங்கப் படும் ‘இலவச’ ரேஷன் விநியோகம், நாட்டைப் பீடித்துள்ள பசியின் கோரத்தை இதைவிட வேறுவிதமாக சமாளிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதார நிலை ‘மிகவும் மோசமாகியுள்ளது’; உலகளாவிய பசிக் குறியீட்டில் இந்தியா 108-ஆவது இடத்தில் உள்ளது என்பதை ஒன்றிய அரசு மறுக்கிறது.

சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்

81.35 கோடி பேர் (3ல் 2பங்கு) பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு பொருட்களும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசி/கோதுமை கிலோ ரூ. 3 அல்லது 2க்கு மக்கள் பெற்றனர். விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை காரணமாக மக்களின் ஊட்டச்சத்து வீழும் அபாயம் உள்ள பொழுது 01.01.2023 முதல் மேற்கண்ட இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்படுகிறது.

இது மோசமான முடிவு. 3ல் 2 பங்கு மக்களுக்கு இரு திட்டங்களும் மிக அவசியம். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3ல் 2 பகுதி மக்களுக்கு அதாவது சுமார் 81 கோடி பேருக்கு இலவச உணவுப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் தருவது எனும் முடிவு, இந்தியாவில் வறுமை கடுமையாக இருப்பதும் இலவச உணவு மூலம் மட்டுமே அதனை எதிர்கொள்ள முடியும் என்பதும் மோடி அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

பின்னர் ஏன் உலக வறுமை பட்டினி குறியீட்டில் இந்தியாவின் நிலை மோசம் என குறிப்பிடுவதை மூர்க்கத்தனமாக இவர்கள் மறுக்க வேண்டும்? கரிப் கல்யாண் அன்ன யோஜனாவில் நிறுத்தப்பட்ட 5 கிலோ அரிசியை வெளிச்சந்தையில் வாங்க கிலோவுக்கு ரூ.40 அல்லது கோதுமையை வாங்க கிலோவுக்கு ரூ.30 செலவிட வேண்டும். இது ஏழைகளுக்கு மேலும் சுமை!

இயலாதவர்களுக்கு ஊட்டச்சத்து குறையும். மோடி அரசு, தனது கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும் பல லட்சம் கோடி வரிச்சலுகைகளும் அள்ளி தந்தது. அந்த தொகையில் இந்த இலவச உணவுத் திட்டத்தை பல ஆண்டுகள் தொடர்ந்திருக்க முடியும்.

Also Read: “சேது சமுத்திரத் திட்டம்.. அத்வானி & ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்” : அம்பலப்படுத்திய முரசொலி !