Politics

"முதலில் மத்திய பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலையை கவனியுங்கள்" -ஆளுநருக்கு கேரள முதல்வர் பதிலடி !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், துணை வேந்தர்கள் பதவி விலகி தேவையில்லை எனவும் கூறியிருந்தது.

ஆளுநர் ஆரிப் முகமது கானின் இந்த உத்தரவுக்கு கேரள நீதிமன்றம் தடை விதித்தது. இந்த விவகாரத்தில், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பல்கலைக்கழகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டவருக்கு, மத்திய பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலை குறித்து தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், வேந்தர் பதவி என்பது அரசியலமைப்பு பதவியல்ல, பல்கலைக்கழக சட்டம் அனுமதித்துள்ள பதவி மட்டுமே என்றும் துணைவேந்தர்களுக்கு எதிராக பல்கலைக்கழக சட்டத்தின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுனராக இருந்து கொண்டு வேந்தர் பதவியை பாதுகாக்கலாம் என்று கருதக்கூடாது. கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், தனக்கு நீதித்துறையை விட அதிக அதிகாரம் இருப்பதாக கருதுகிறார். மாநில அரசுக்கு சமமாக ஆட்சி செய்ய ஆளுநர் முயற்சிக்கிறார். அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அமைச்சரவை உள்ளது. சட்டசபையின் அதிகாரத்தை பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று காட்டமாக கூறினார்.

மேலும், தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ஆளுனர் நினைத்தால் அதனை மனதுக்குள் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிப்முகமதுகானுக்கு பினராய் விஜயன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read: கர்நாடகாவை உலுக்கிய HoneyTrap.. Record செய்யப்பட்ட ஆபாச வீடியோ! இளம் பெண்ணிடம் ஏமாந்த மடாதிபதி தற்கொலை!