Politics

ரூ.1,400 கோடி கறுப்புப் பணம் - டெல்லி துணை நிலை ஆளுநர் பதவி விலக கோரி ஆம் ஆத்மி கட்சி போராட்டம் !

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருந்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்து வருகிறது.

சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி டெல்லி துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் பின்னர் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. டெல்லியில் ஆட்சியைக் கலைப்பதற்காக பா.ஜ.க, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.800 கோடியை ஒதுக்கியிருப்பதாக, கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாகவும், இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் நேற்று விடிய விடியப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிஷி "கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த சக்சேனா, ரூ.1,400 கோடி மதிப்பிலான கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றார். இது மிகப்பெரும் ஊழல். மேலும், ஒரு பணமோசடி வழக்கு. எனவே பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ் அமலாக்கத்துறை சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு, விசாரணை முடியும் வரையில் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்றும் கூறினார்.

Also Read: ஆங்கிலம் மட்டுமல்ல இந்த மொழிகளும் பயிற்றுவிக்கப்படும் -நான் முதல்வன் திட்டம் மூலம் CM வெளியிட்ட அறிவிப்பு