Politics

“தலைநகர் தொடங்கி பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு”: மோடி அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

கொரோனா பாதிப்புக்குப் பின்னர் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் சூழலில், அதற்கு தேவையான மின்சாரத்தை தர வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும் என்று ‘தினகரன்’ நாளேடு 11.10.2021 தேதியிட்ட இதழில் ‘மின் தட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

அது பற்றிய விவரம் பின்வருமாறு:

ஒரு நாட்டின் உள்கட்டமைப்பில் மின்சாரம் மிக முக்கியமானது. கடந்த ஒரு நூற்றாண்டாக மின்சார தயாரிப்பில் நிலக்கரியின்பயன்பாடு அதிகம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளில் நிலக்கரி பயன்பாடு குறைந்து விட்டாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்னமும்: நிலக்கரியின் பங்களிப்பு மின் உற்பத்தியில் குறையவில்லை.

இந்தியாவில் சமீபகாலமாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் தினசரி மின்நுகர்வு உற்பத்தி இந்தியாவில் இல்லை. இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கான செலவும் இப்போது மும்மடங்கு உயர்ந்துவிட்டது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரியை அதிகளவு இறக்குமதி செய்ய முடியவில்லை. நாட்டின் நிலக்கரி இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு காரணம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நிலக்கரி சுரங்க பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தொழிற்சாலை உற்பத்தி முழு வேகமெடுத்து வரும் நிலையில், நாட்டின் மின்சார தேவைகளும் அதிகரித்து வருகின்றன. அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மின் பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டெல்லி, ராஜஸ்தான். கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டு வருகின்றனர். நிலக்கரி பற்றாக் குறை தொடர்ந்து நிலவினால், தலைநகர் டெல்லி தொடங்கி பல மாநிலங்களில் வரும் நாட்களில் மின்தட்டுப்பாடு, அதிகரிக்கும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அனல்மின் நிலையங்களை இயக்கமுடியாத நிலை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே ஒன்றிய அரசு நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு தேவையை உணர்ந்து நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு பின்னர் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் சூழலில், அதற்கு தேவையான மின்சாரத்தை தர வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும்.

Also Read: “அணுக்கழிவில் அலட்சியம் வேண்டாம்.. இது சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; தமிழ்நாட்டின் எதிர்காலம்”: முரசொலி !