Politics

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டுக்கே முன்னோடி தி.மு.க அரசு: பட்டியலிட்ட ஆங்கில நாளேடு!

மகாராஷ்டிராவில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தாமலே இருந்தது தேசிய குற்ற ஆராய்ச்சி பணியகத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது என ஆங்கில நாளேடான டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 30 ஆண்டுகள் ஆகியும் 2018ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் நான்கு சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் கடந்த காலங்களில் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை.

மேலும், மகராஷ்டிராவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீவிரமாக கையாளாப்படவில்லை என கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது என்றும் 25 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 2016-18ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஒரு முறை கூட கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்படவில்லை, இந்த கூட்டங்கள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படவேண்டும் என கூறியிருந்ததாகவும் டெக்கான் ஹெரால்ட் குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முந்தைய அ.தி.மு.க அரசு கடந்த ஆண்டு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தொடர்பான மாநில கண்காணிப்பு கூட்டத்தை நடத்தியது. அதுவும் நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக நடத்தப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியதோடு, கொரோனா ஊரடங்கின்போது பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் 12 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் தண்டனை விகிதம் 25% ஆக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் தண்டனைகளே பதிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. அரசு 100 நாட்களுக்குள் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான மாநில கண்காணிப்புக் குழுவை மீண்டும் உருவாக்கியதோடு அதற்கான முதல் கூட்டத்தையும் நடத்தியிருக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசின் இந்தஅ செயல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது.

ஆனால், ஏற்றத்தாழ்வுகளை களைந்த, சாதிய வன்முறைகளை எதிர்த்த அண்ணல் அம்பேத்கர் பிறந்து, வாழ்ந்த மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது எப்போது தமிழ்நாடு அரசு போன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

Also Read: ”அதிமுகவின் அவலத்தால் தளர்ந்த தமிழகம்; திமுகவின் அதிரடியால் தலை நிமிர்கிறது” - தினகரன் நாளேடு புகழாரம்!