Politics

கொடநாடு: மறுவிசாரணைக்கு வரும் தினேஷின் மரணம்; தந்தை போஜனின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் என்ன தெரியுமா?

கொடநாடு கணினிப் பொறியாளர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது தனிப்படை போலிஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ததுடன் கோத்தகிரி தாசில்தாருக்கு தினேஷ் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த மனு அளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இவ்விவகாரம் குறித்து கேரளாவை சேர்ந்த சயான் உட்பட பதினொரு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளிகள் கனகராஜ் ஆத்தூரில் நடைபெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், இரண்டாவது குற்றவாளி சாயன் தனது மனைவி குழந்தையுடன் கோவையில் இருந்து பாலக்காடு சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சாயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் .சாயன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி பொறியாளர் தினேஷ் கொலை கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கை சோலூர் மட்டம் போலிஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் மறைந்து இருப்பதாக கூறி கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபாவிடம் மறு விசாரணை நடத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து மறுவிசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டதன் பேரில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் ஐந்து குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் தினேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். தினேஷின் தந்தை போஜன் மற்றும் தினேஷின் சகோதரி ஆகியோரிடம் கோவையில் போலிஸார் நடத்திய விசாரணையில் தினேஷ் தந்தை போஜன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் . அதில் கொலை கொள்ளை சம்பவம் நடந்த ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு முதல் தினேஷ் தற்கொலை செய்துகொண்ட நாள்வரை அவன் தாய், சகோதரி நண்பர்கள் என யாரிடமும் பேசாமல் மன உளைச்சல் ஆக காணப்பட்டார்.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டான் என தினேஷின் தந்தை போஜன் தெரிவித்துள்ள நிலையில், தினேஷ் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என தனிப்படை போலிஸார் வழக்கை மாற்றி அமைத்து தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி தாசில்தார் இடமும் சோலூர் போலிஸார் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தினேஷ் பணி புரிந்த கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை விசாரணை நடத்த தனிப்படை போலிஸார் முடிவு செய்து அவரை விசாரணைக்கு நேரில் வர சம்மன் அழிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: கொடநாடு மர்மம்: ஆதாரங்களை துருவி துருவி மீட்கும் போலிஸார்; முக்கியப் புள்ளிகளுக்கு காத்திருக்கும் வேட்டு