Politics

வேலுமணியின் டெண்டர் முறைகேடு: தயாரானது பெயர் பட்டியல் - விசாரணை களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை செய்ய பெயர் பட்டியல் தயார் செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது கடந்த 2018ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு டெண்டர் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி நிறைவடைந்த நிலையில் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதற்கான பட்டியலை தயார் செய்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வங்கி கணக்குகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் முடக்கினர். குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வங்கி கணக்குகளுக்கு அதிக முறை பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேபோல் பணப்பரிவர்த்தனை முறைகேடு அடிப்படையில் நடைபெற்றதா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பாஜகவின் துவேஷ அரசியலுக்கு செக் வைத்த தி.மு.க - அறம் இணையம் புகழாரம்!