Politics

“ராமர் கோவிலா? ஊழல் கோவிலா?” : ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வகையறாக்களை வெளுத்து வாங்கிய ‘தீக்கதிர்’ தலையங்கம்!

அயோத்தில் ராமருக்கு கோவில் கட்டப்போவதாக கூறி கடந்த பல பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வகையறா வகுப்புவாதத்தை தூண்டி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்தனர் என தீக்கதிர் தலையங்கம் தீட்டியுள்ளது.

தீக்கதிர் நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்கப்பட்டதில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தபோதே நன்கொடை என்ற பெயரில் பெருமளவு பணம் சுருட்டப்பட்டது.

அதற்கு முன்பு கரசேவை என்ற பெயரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. செங்கல் பூஜை என்ற பெயரில் நாடு முழுவதும் வெறித்தனமான பிரச்சாரம் கிளப்பிவிடப்பட்டது. அப்போதும் பெருமளவு பணம் சுருட்டப்பட்டது. இதற்கெல்லாம் முறையான வரவு, செலவு இல்லை.

இந்தநிலையில், அயோத்தி இடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா என்ற பெயரில் அமைப்பட்ட அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டது. பேக்பைசி என்ற கிராமத்தில் 1208 சதுர மீட்டர் நிலம் வாங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியுள்ளது.

இந்த நிலம் அறக்கட்டளையால் வாங்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குசும்பதக் என்பவரிடமிருந்து பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ரூ.2 கோடிக்கு வாங்கி அடுத்த நிமிடமே ரூ.18.5 கோடிக்கு விற்றுள்ளனர். இந்த அறக்கட்டளையை உருவாக்கியதில் பிரதமர் மோடிக்கு முக்கிய பங்குண்டு. ராமருக்கு கோவில் கட்டப் போவதாக கூறி பெரும் தொகையை இந்த அறக்கட்டளை வசூல் செய்து வருகிறது. நிலம் வாங்கியதிலேயே இவ்வளவு பெரிய மோசடி என்றால், கட்டுமானப் பணிகள் விசயத்தில் எந்தளவுக்கு ஊழல் நடைபெறும் என்று புரிந்து கொள்ள முடியும்.

அயோத்தில் ராமருக்கு கோவில் கட்டப்போவதாக கூறி கடந்த பல பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வகையறா வகுப்புவாதத்தை தூண்டிவிடுகிறது. இதை பயன்படுத்தியே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்தனர். அடுத்தாண்டு உ.பி., மாநிலத்தில் சட்டப் பேரவைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருவது தங்கள் கட்சியின் மிகப் பெரிய சாதனை போல பா.ஜ.கவினர் பேசிவருகின்றனர். வரும் தேர்தலில் இதை ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயல்கின்றனர்.

அயோத்தியை அடுத்து மேலும் சில இடங்களில் வழிபாட்டுத்தல பிரச்சனையை கிளப்பவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இவர்களது உண்மையான நோக்கம் பக்தியல்ல, கலவர புத்தியும், ஊழலுமே என்பது தெளிவாகிவிட்டது. அறக்கட்டளை இந்த விசயத்தில் முறைகேடு நடக்கவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை.

உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள போதிலும் அது உண்மையை மூடி மறைக்கவே பயன்படும். எனவே உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த ஊழல் குறித்து வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஆராய புதிய ஆணையம்: தமிழ்நாடு அரசு அதிரடி!