Politics

“சீமையில் இல்லாத உத்தமரா?” - சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது முறையல்ல - துரைமுருகன் கண்டனம்!

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கியது ஆளுநருக்கு அழகல்ல என திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டியளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார், முன்னாள் அமைச்சர் விஜய், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சகி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். தொண்டர்கள் வரிசையில் வந்து அவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சால்வைகளை வழங்கி சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன், அஞ்சல் துறையின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்துவது என்பது பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதே கடமையாக உள்ளது. கடந்த முறை தமிழில் தேர்வு நடத்தப்பட்டது ஆனால் தற்போது ஹிந்தி திணிப்பு சமஸ்கிருத அங்கிகாரம் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை நியமித்தது தான் சீமையில் இல்லாத உத்தமன் போல் ஆனால் ஊழல்கள் ஊர் சிரிக்கிறது.

ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரின் பதவியை நீட்டித்திருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மாணவர்களுக்கு தமிழக அரசு 2 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது. ஆனால் அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். அவர்கள் எதையும் நிறைவேற்றபோவதில்லை. திமுக அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என்று அதிமுக கூறுகின்றனர்.

ஆனால் நாங்கள் ஏற்கனவே ஒருமுறையில் ஆட்சியிலிருந்த போது விவசாய கடனை தள்ளுபடி செய்து அதனை நிருபித்துள்ளோம். தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நடந்தால் உங்களிடம் தெரிவிக்கிறோம். புதிய கட்சிகள் கூட்டணி வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு இப்போது எதையும் தெரிவிக்க முடியாது. பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை என்று கூறினார்.

Also Read: “முதற்கட்ட ஊழல் புகார்களுக்கே இவ்வளவு பதற்றம் வேண்டாம்” - முதல்வர் பழனிசாமிக்கு துரைமுருகன் பதிலடி!