Politics

“வேனில் ஏறி ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் துப்பில்லாத முதலமைச்சர்” - எடப்பாடியை சரமாரியாக தாக்கிய ஆ.ராசா!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசியதன் விவரம்:

“கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பழனிசாமி தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி விவாதத்துக்கு அழைத்து வருகிறார்.

விவாதம் குறித்து கடந்த வாரம் முதலமைச்சருக்கு நான் எழுதிய மடலுக்கு இதுவரை பதிலில்லை. சர்க்காரியா, 2ஜி போன்ற நிரூபணமற்ற, நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க தலைவி ஜனநாயகத்தை படுகொலை செய்ததாக சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

ஊழல் கண்காணிப்பு பிரிவு முதல்வர் கட்டுபாட்டில் வருவது, எங்களது புகார் மனுவை அவர்கள் புறக்கணித்தார்கள். உச்சநீதிமன்றம் இதைக் கண்டித்தது. நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக உலக வங்கியின் நிபந்தனைகளை சரிவர கையாளவில்லை என உச்சநீதிமன்றம் குறை கூறியுள்ளது.

தமிழகத்தில் உண்மையில் சட்டத்தின் ஆட்சி் நடக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது. வேலுமணி மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை தயாரித்துள்ள தமிழக அரசு புகார்தாரர்களாகிய எங்களுக்கு அந்த அறிக்கையை இதுவரை தரவில்லை.

மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் 58 பேர் சொத்து சேர்த்தாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதல்வர் கூறுகிறார். பழனிசாமிக்கு முன்பே நான் பெரிய ஆள், மத்திய அமைச்சராக இருந்தவன் நான். அவர் என்னுடன் விவாதிக்க வராவிட்டாலும் யாரேனும் ஒருவரை அனுப்புங்கள்.

சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து உதயநிதி தவறாக பேசியதாக திரிக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி வடிகட்டிய முட்டாள். ஒ.பி.ஷைனி 400 பக்கங்களில் கலைஞர் டி.விக்கான பணம் குறித்து எழுதியுள்ளார். 1322ம் பக்கத்தில் ராஜா , கனிமொழிக்கு பரிவர்த்தனையில் பங்கு இருக்கின்றதா என கூறப்பட்டுள்ளது. அதை படித்தறிய துப்பில்லாத முதலமைச்சர் வேனில் ஏறி அவதூறு பரப்புகிறார்.

தைரியமிருந்தால் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சொத்துக் குவிப்பு குறித்து வழக்கு தொடர வேண்டும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யட்டும்.

ஊடகத்துறைக்கு வரம்பு இல்லை ஏனெனில் ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு ஊடகத்திற்கே உண்டு என அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் கூறினார். 2ஜி பற்றிய முடிந்த வழக்கை ஏன் பேச வேண்டும். அ.தி.மு.கவினர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் படத்தை போட்டு வாக்கு கேட்கின்றனர்.

Also Read: “என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க அரசை தோலுரித்து காட்டுவேன்”: ஆ.ராசா!

ஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து நாங்கள் கொடுத்த புகாரில் எந்த முன்னேற்றமுமில்லை. எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் முதலமைச்சருடன் விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தனது உதவியாளரை அனுப்பினாலும் நான் விவாதிக்க தயார்.

முதலமைச்சரிடம் இருந்த 30 ஏக்கர் நிலம் கூட என்னிடம் இருந்ததில்லை, நான் பரம ஏழை. தி.மு.க தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும். பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு, ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டுள்ளனர். சசிகலா விடுதலை அ.தி.மு.கவின் உட்கட்சி பிரச்னை.

தி.மு.கவை அழகிரி உட்பட யாராலும் பலவீனப்படுத்த முடியாது. இந்து குழும தலைவர் என்.ராம் , தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியின் சூழலை பார்த்தால் ஆட்சி் மாற்றம் அவசியத் தேவை என்று தோன்றுவதாக கூறுகிறார்.

குடியுரிமை, வேளாண், அணை பாதுகாப்பு சட்டங்களை மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக இயற்றியுள்ளது. மாநில உரிமைகளை மீறியுள்ளது. அது குறித்த கருத்தரங்கம் தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Also Read: “ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் ஏற்படும்” : ஆ.ராசா உறுதி!