Politics
"நீட் விவகாரத்தில் முரண்பட்ட நிலைப்பாடு : அ.தி.மு.க அரசின் பச்சைத் துரோகம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
"நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பேசுவதா?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்குத் தாருங்கள் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சம்பிரதாய முறையில் எழுதியிருக்கும் வழக்கமான கடிதமும்; அதற்கு முரண்பாடாக, கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் பழனிசாமி கடலூரில் இன்று சொல்லி இருப்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்துள்ள பச்சைத் துரோகங்கள்.
நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு தேவை என்பதுதான் தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை. ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்குக் கோரி, சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு; அதற்கு மாறாக, முதலமைச்சரே பேசுவது தமிழ்நாடு இதுவரை கண்டிராத விசித்திரம்!
அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு தனது அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்துக்கு எதிராகவே பேசும் முதலமைச்சர் என்ற 'புதிய சாதனையை' பழனிசாமி படைத்திருக்கிறார். சந்தர்ப்பவாத பூனைக்குட்டி இப்போதாவது வெளியே வந்திருந்திருக்கிறதே என்று தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு!
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரிய தமிழக சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது; எஜமானர்களை எதிர்த்துக் கேட்கும் தெம்பில்லாத அ.தி.மு.க. அரசு, அந்தச் சட்ட முன்வடிவுகளைக் கமுக்கமாகக் கைவிட்டுவிட்டது!
நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு எடுத்துள்ளதை, தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். செல்வங்கள் அனிதா, சுபஶ்ரீ தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் இரக்கமற்ற செயல் இது.
தமிழகச் சட்டமன்றப் பேரவையைக் கூட்டி, "தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த மாட்டோம்; பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்" என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். நாம் கேட்பது, ஓராண்டுக்கான தற்காலிக விலக்கு அல்ல!; உயிர்க்கொல்லி 'நீட்'டிடம் இருந்து, கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு!
அந்தப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமையில் இருந்து அ.தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக, நழுவிப் போக நினைத்தாலும், மாணவர் நலனிலும் சமூகநீதியிலும் தளராத நம்பிக்கை கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அதை அனுமதிக்கவே அனுமதிக்காது!
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?