Politics

"சொன்னா கேட்குறதில்ல - சரியான 'வாபஸ்' பழனிசாமி" பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!

நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யவிருந்த புதிய பாடத் தொகுப்பு முறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

11 மற்றும் 12-ம் வகுப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் 6 பாடத் தொகுப்பும், கூடுதலாக 5 பாடத் தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட இருந்தது.

இதில், 5 பாடங்கள் அடங்கிய தொகுப்பில் சேர்ந்தால், உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்று கல்வியாளர்களும், பெற்றோரும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, புதிதாக அறிவிக்கப்பட்ட தொகுப்பு பாடத் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

புதிய பாடத் தொகுப்பு முறை அறிவிக்கப்பட்ட முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அத்திட்டம் ரத்து செய்ததை வரவேற்றுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட கருத்தில் " குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.

முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது!

இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா?

சரியான ‘வாபஸ்’ பழனிசாமி!" என்று தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்ல இன்னும் பல மக்கள் விரோத திட்டங்களை அறிவித்துவிட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சன எழுந்த உடன் பின்வாங்குவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது தமிழக அரசு. திட்டத்தை சிந்திக்கும் போது மக்கள் நலன் கருத்தில் கொள்வதில்லை என்பதே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் குற்றாச்சாட்டு.

Also Read: "விளை நிலங்களில் எண்ணெய் குழாய்-வாய் பொத்தி நிற்காமல் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்க" மு.க.ஸ்டாலின்