Politics
”ராணுவத்தில் அரசியல் தலையீடு உள்ளதோ என சந்தேகம் எழுகிறது”-பிபின் ராவத்தின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்
நாடு முழுவதும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெண்கள், இளைஞர்கள், எதிர்க்கட்சிகள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
அதில், “மக்களை வழிநடத்துபவரே தலைவர். நீங்கள் முன்னோக்கி நடந்தால் மக்களும் உங்களைப் பின்தொடர்வார்கள். ஆனால், அப்படி வழிநடத்தும் தலைவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கவே முடியாது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார்கள். இது நல்ல தலைமை அல்ல” என பிபின் ராவத் பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவில் இதுவரையில் இப்படி எந்த இராணுவத் தளபதிகளும் அரசியல் பேசியதில்லை. தற்போது இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்கள் வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இராணுவத் துறையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்னும் அய்யத்தை எழுப்புகிறது. அத்துடன், இனிவருங்காலங்களில் அரசியலிலும், அரசிலும் இராணுவத்தின் தலையீடும் இருக்குமோ என்கிற அச்சத்தையும் உண்டாக்குகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவையில் தீர்மானித்தபடி புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளுக்குமான தலைமை தளபதி பொறுப்பில் பிபின் ராவத் அவர்கள் நியமிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், அவரது பேச்சு பதவிக்காக எதிர்க்கட்சிகளைச் சாடுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெற்ற மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் உயர் அதிகாரியான இராணுவத் தலைமை தளபதி பேசி அரசியலில் தலையிட்டிருப்பது சீருடை பணியாளர்களுக்கான விதிகளையும் மரபுகளையும் மீறும் செயலாகும். ஆகவே, இராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!