Politics

நீட் விலக்கு தீர்மானம் போட்ட அ.தி.மு.க : உள்ளாட்சித் தேர்தலுக்காக நாடகம் போடும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் !

’நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர். இதில் தொடர்ந்து அ.தி.மு.க மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசோடு சேர்ந்து நாடகம் ஆடிவருகிறது.

கடந்த முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது. இது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த ஒரு மேல் நடவடிக்கையோ, அதற்கான எதிர்ப்பு குரலையோ தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜ.க அரசை வலியுறுத்துவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது நீட் தேர்வு மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது அவ்வாறு செய்தால் தமிழகத்துக்கான நிதியை கேட்டுப்பெற முடியாது என அ.தி.மு.க அரசு கூறியது.

தற்போதோ அதே நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியுள்ளது அ.தி.மு.க. இதற்குக் காரணம், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதால் மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது அடிமை அ.தி.முக.

ஆட்சி அதிகாரத்திற்காக மக்களை ஏமாற்றும் அ.தி.மு.க.,வின் பொய் உத்தரவாதங்களில் இதுவும் ஒன்று என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதையே இன்றைய முரசொலி நாளிதழும் சுட்டிக்காட்டி உள்ளது.