Politics

“தி.மு.க ஆட்சியில் வழங்கிய முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிட்டது அ.தி.மு.க” - ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு!

தி.மு.க ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை அ.தி.மு.க அரசு நிறுத்திவிட்டது என தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், எம்.எல்.ஏ-வும், தி.மு.க துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆலமரத்தடியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்துப் பேசிய ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ, “தி.மு.க ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை அ.தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தல் வருவதால் தொகுதிக்கு சுமார் 2,000 பேருக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் மட்டுமே 10,000 பேருக்கு தி.மு.க அரசு வழங்கிய முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என உறுதியளித்தார்.

மேலும், “தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக ஆலமரத்துப்பட்டி பிரிவில் விபத்து அதிக்கடி நடப்பதால் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து உயர்கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆத்தூர் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஐ.பெரியசாமியிடம் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் சிலர் தங்களுக்கு 85 நாட்கள் வரை ஊதியம் வழங்காமல் இருப்பதாகவும், அலுவலர்கள் சரியான பதில் அளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தகுந்த நடவடிக்கை எடுத்து, சரியான காலத்தில் ஊதியம் கிடைக்கச் செய்வதாக ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

தி.மு.க எம்.எல்.ஏ இருக்கும் தொகுதி மக்களின் மனுக்களை அ.தி.மு.க அமைச்சர்கள் நிராகரிப்பதாக குற்றச்சாட்டு!