Politics
தமிழக தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க பிரதமர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - திருமாவளவன்!
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இருநாடு உறவு குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்நிலையில், இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.
அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் சென்னை அருகே நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமெனவும்; இந்திய-சீன வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பற்றாக்குறையைச் சரி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமெனவும் நம்புகிறோம்.
இந்துமாக்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்வதற்கும்; இலங்கையில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பைக் கேட்டுப்பெறுவதற்கும் இந்த சந்திப்பை நமது பிரதமர் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.
இந்திய – சீன நல்லுறவு வலுப்பெறுவது ஆசியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உலக அமைதிக்கு இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு வெற்றிபெற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.
உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்கு தமிழ்நாட்டின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த தொன்மை மாநகரமான மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது நமக்குப் பெருமையளிக்கிறது.
இத்தருணத்தில் இந்தியாவிலேயே தொல்லியல் வளம் நிறைந்த தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும் தொல்லியல் ஆய்வுகளை மேம்படுத்தவும் பிரதமர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் வி.சி.க சார்பில் கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!