Politics

“அ.தி.மு.கவில் களப்பணியை விட பணப் பணியே அதிகம்”: திருநாவுக்கரசர் சாடல்!

இந்தியாவில் ஜனநாயகத்திற்குப் புறம்பான சர்வாதிகார ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி., திருநாவுக்கரசர் பேசியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாக பிரமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு தொடுத்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்ச நிலையை காண்பிக்கிறது எனச் சாடியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பொருளாதார ரீதியில் பா.ஜ.க பயன் பெற்றுவருவதால் தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஆதாய திருட்டுகள் ஆகியவை அதிகரித்து வருகின்றன. அரசு இரும்புக் கரம் கொண்டு இதனை அடக்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலின் நிலை மதில் மேல் பூனையாக உள்ளது. தோல்வி வந்துவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அ.தி.மு.கவில் தேர்தல் களத்தில் களப்பணியை விட பணப்பணிதான் அதிகமாக இருக்கிறது என்றார்.

மேலும், எந்த நடிகர் கட்சித் தொடங்கினாலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்கமுடியாது என்றார்.