Politics
“அவரது உடல் எடை குறையலாம்; மனதிடம் குறையவில்லை” - ப.சிதம்பரத்தைச் சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து பேட்டி!
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.
சி.பி.ஐ காவலில் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து பிற்பகல் 3 மணியளவில் அவர் டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து அக்டோபர் 17 வரையில் திகார் சிறையில் அடைக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வைரமுத்து, பேராயர் எஸ்ரா சற்குணம் ஆகியோரை ப.சிதம்பரம் சந்திக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறையில் சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்.
ப.சிதம்பரத்தை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன்; அவர் மன உறுதியுடன் நின்றார். ப.சிதம்பரத்தின் உடல் எடை குறைந்து இருக்கலாம்; நிறம் குறைந்து இருக்கலாம்; ஆனால், அவருடைய மன திடம் என்பது குறையாமல் உள்ளது. ப.சிதம்பரத்திற்கு நிச்சயம் ஜாமின் கிடைக்கும்.
ப.சிதம்பரம் 9 முறை நிதி அறிக்கையை தாக்கல் செய்தபோதும், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதும் அவரை காண நான் வரவில்லை. அவர் என்னுடைய நண்பர். இந்தியாவிற்கு வெளியே தமிழர்களின் ஒரு அடையாளமாக, அரசியல் அடையாளமாக திகழ்ந்தவர் ப.சிதம்பரம்.
சிதம்பரத்தின் வயது, அவருடைய உடல்நிலை ஆகியவற்றைக் கருதியும் அவருடைய, தொண்டுகளைக் கருதியும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கும் என நம்புகிறேன்” கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
Also Read
-
சுகாதார அலுவலர்களுக்காக ரூ.4.05 கோடியில் 45 புதிய வாகனங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உருவாகிறது புயல் : எப்போது?.. எங்கே?... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பா?
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!