Politics

“மோடி பேசியதற்கு நேரெதிராகத்தான் பா.ஜ.க செயல்படுகிறது” : கே.எஸ்.அழகிரி பேட்டி!

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஐ.நா-வில் பிரதமர் மோடி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாசகங்களைப் பேசி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழும் தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றென்றும் நிலைநிற்கக் கூடியவை. அந்தவகையில் மோடி பேசியதற்கு எனது பாராட்டுகள். இருப்பினும் இது வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு நேரெதிராகச் செயல்பட்டு வருகின்றன” எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், “நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எங்களை எதிர்த்து நிற்பவர்கள் சுய மரியாதை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் பொதுமக்கள் அதிக வாக்குகளை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய கே.எஸ்.அழகிரி, எங்கள் கூட்டணி பொய்யான வாக்குறுதியை கொடுப்பது இல்லை; எங்களால் செய்ய முடிந்த அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போராடி வெற்றி பெற்று இருகின்றனர். அதற்கு உதாரணம் ரயில் தேர்வு மொழிகளில் தமிழ் மீண்டும் பெற்றுத்தரப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, நீட் தேர்வு முறை தவறானது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த மாநிலத்திலேயே தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். பேனர் வைத்தவர்கள் அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் என எல்லோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.