Politics

காஷ்மீர் விவகாரம் : “ஜனநாயகப்பூர்வ நாடு என்கிற மாண்பை இந்தியா இழந்துள்ளது” - அமர்த்தியா சென் வேதனை !

மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்களை கடந்த மாதம் ரத்து செய்துள்ளது. மேலும் மாநில அந்தஸ்தைப் பறித்து, யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னதாக எந்த ஒருமுடிவையும் வெளிப்படையாக அறிவிக்காமல், மக்களை ஒடுக்கி அதன் பின்பு சட்டத்தை நிறைவேற்றியது.

இது மேலும் காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அனைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தற்கு கடும் கண்டங்களையும் விமர்சங்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “இந்தியன் என்ற முறையில் இந்த முடிவு எனக்குப் பெருமை அளிக்கவில்லை. இந்தியா எப்போதும் தான் ஒரு ஜனநாயகப்பூர்வ நாடு என்று காட்டுக்கொள்வதில் முனைப்போடு செயல்படும். ஏன் மேற்கத்திய நாடுகளைத் தவிர ஜனநாயகப் பாதையைத் தேர்வு செய்த முதல் நாடும் இந்தியா தான். ஆனால் தற்போது அந்த மாண்பை இந்தியா இழந்துள்ளது.

குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் அம்மக்கள் தான் முடிவு எடுக்கவேண்டும். ஏனெனில் அது அவர்களின் நிலம். காஷ்மீர் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்து விட்டு, உண்மயை நிலைநாட்டுவதாக சொல்கிறார்கள் அது எப்படி முடியும். நீங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் காரணிகளை நசுக்குகிறீர்கள்.

இதன் மூலம் பெரும்பான்மையினர் ஆட்சி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு காஷ்மீர் விவகாரம் ஒரு உதாரணம். அரசு எடுத்த இந்த நடவடிக்கையில் பல்வேறு கோளாறுகள் உள்ளது. இந்த விவகாரத்தை ஜனநாயக முறையில் அணுகவில்லை என்றால் இதற்கு தீர்வே இல்லாமல் போகும்” என அவர் தெரிவித்துள்ளார்.