Politics

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரை இழுத்த பா.ஜ.க- சிக்கிம் முன்னாள் முதல்வர் கட்சிக்கு நேர்ந்த அவலம் !

கோவாவைத் தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தில் அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து நாடு முழுவதும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களையும், முன்னணி பிரபலங்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை மறைமுகமாகச் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சிக்கிம் மாநிலத்தைக் கையில் எடுத்து, முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ-க்களை தன் வசம் இழுத்துள்ளது பா.ஜ.க. பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் தாமரை கட்சியில் இணைந்துவிட்டதால் என்ன செய்வது என தெரியாது திகைத்து நிற்கின்றார்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர்கள்.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் பிரதிகாரி கட்சி 17 இடங்களில் வென்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் சிக்கிம் பிரதிகாரி கட்சியைச் சேர்ந்த பி.எஸ் கோலாய் முதல்வரானர்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களில் பா.ஜ.க போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தைக் கூட பா.ஜ.க-வினால் பெறமுடியவில்லை. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க-வுக்கு இப்போது பெரும்பான்மையான எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சென்றிருப்பது பெரும் பலமாக மாறியுள்ளது.

பவன் குமார் சாம்லிங்

பா.ஜ.க-வின் பக்கம் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 10 எம்.எல்.ஏ-க்கள் தாவிய நிலையில், மிதமிருந்த மூன்று பேரில் இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவில் சேர்ந்துள்ளனர். தற்போது முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் மட்டும் தனி ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-ஆக இருக்கிறார்.

இப்போது சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ-ஆக சாம்லிங் மட்டுமே உள்ளார். இவர் 1994ம் ஆண்டு முதல் ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் 25 ஆண்டுகளாக சாம்லிங் முதல்வராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பா.ஜ.க திரிபுராவை பின் வாசல் வழியாக கைப்பற்றியது. அதன் பின்பு கோவா, கர்நாடகா என தனது மோசமான அரசியல் தந்திரத்தை செயல்படுத்தி அம்மாநிலங்களில் ஆட்சியை தன்வசமாக்கியது. தற்போது, கட்சியே இல்லாத இடங்களில் கூட ஆட்சி செய்ய பா.ஜ.க முனைப்பு காட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது அரசியல் ஜனநாயகப் படுகொலை என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.