Politics

கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர்... காரணம் என்ன?

கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளை சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலக செயலாளர் விஷாலக்‌ஷிமியிடம் வழங்கி சென்றனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுப்பிற்கு பிறகு இன்று அலுவலகம் வந்த சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா செய்த கடிதங்களை பரிசீலனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வந்த உரிய விளக்கத்தை அளித்தபின் ராஜினாமா கடிதம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். மேலும், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்றார். ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ள ராஜினாமா கடிதத்தை தற்போது ஏற்பதில்லை என தெரிவித்தார்.

இதற்கிடைே விதான்சவுதாவில் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 57 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர். ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லாது மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.