Politics

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் முதலமைச்சர்கள் இன்று சந்திப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். இவரது இந்த முடிவை கைவிடும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் 5 மாநில முதலமைச்சர்களான புதுச்சேரி நாராயணசாமி, மத்திய பிரதேசத்தின் கமல்நாத், சத்தீஸ்கரின் புபேஷ் பாஹல், ராஜஸ்தான் அசோக் கெலாட், பஞ்சாப்பின் அம்ரீந்தர் சிங் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், ராஜினாமா முடிவை கைவிடும்படி ராகுல்காந்தியிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு மாநிலங்களவை உறுப்பினரான பிரதாப் சிங் பஜ்வா கடிதம் எழுதியிருந்தார். அதில், தேர்தலில் தோல்வியடைந்ததை கருத்தில்கொண்டு ராகுல்காந்தி எடுத்திருக்கும் முடிவு அனைத்து காங்கிரஸாருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே அமையும். ஆனால் அதனால் எவ்வித நற்பலன்களும், விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.