Politics

பா.ஜ.க. மாநிலங்களவை தலைவராக தவர்சந்த் கெலாட் நியமணம் !

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. மத்தியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் மக்களவை கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் மாதம் 17-ம் தேதி துவங்குகிறது. மக்களவையில், புதிய எம்.பி-கள் பொறுப்பேற்றுக் கொள்வர். 19-ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. மறுநாள் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.

இந்நிலையில் பா.ஜ.க மாநிலங்களவை தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக பிரதமரிடம் கூறினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக, மத்திய அமைச்சர் தவர் சந்த் கெலாட் பா.ஜ.க மாநிலங்களவை தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தவர்சந்த் கெலாட் நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2012-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தற்போது மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பதவிகாலம் வரும் 2022-ஆம் ஆண்டு முடிவடைகிறது.

இந்நிலையில் துணை தலைவர் பதவிக்கு, மோடி அரசின் நம்பிக்கை வாய்ந்தவராக கருதப்படும் பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் உள்ள பியூஷ் கோயல் ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றக் குழு தலைவராக பிரதமர் மோடியும், துணை தலைவராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.