Politics

இலங்கை கல்முனை பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு ! 

இலங்கையில் ஈஸ்டரன்று தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, ராணுவமும் போலீசாரும் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிறிது நேரத்தில் வீட்டில் குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இலங்கை கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்புக் கொண்டது.