உணர்வோசை

பொய்யை திரும்ப திரும்ப உரக்க பேசி அரசியல் முடிவை மாற்ற முடியுமா ? நாசிசமும் RSS அமைப்பும் செய்தது என்ன ?

பொதுவாக அரசியல் சூழல்களை ‘பைனரி’தன்மையோடு அணுகும் முறை ஆரோக்கியமானது அல்ல. ஆனால் பாசிசம் வளர்த்தெடுக்கப்படும் உலகச் சூழலில் இத்தகைய பைனரிதன்மையே அரசியல் அறிவாக மாற்றப்படுகிறது. திறனாக கற்பிக்கப்படுகிறது. கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா முதலிய நிறுவனங்கள் சமூக ஊடகத்தில் இருக்கும் இத்தகைய அரசியல் தன்மைகளை பைனரி சிந்தனைகளாக சுருக்கி தங்களின் வாடிக்கையாளர் வேட்பாளர்களுக்கு வாக்குகளை கூட்டிய உத்திகளை உலகம் ஏற்கனவே பார்த்திருக்கிறது.

பைனரி அரசியல் வளர்வதற்கு சமூக ஊடகம் முக்கிய காரணமாக இருக்கிறது. பாசிசமும் எதேச்சதிகாரமும் வெறுப்பு அரசியலும் வேறெப்போதும் இல்லாதளவு உலகின் பல இடங்களில் இப்போது தோன்றுவதற்கான காரணத்தை சமூக ஊடகம் வழங்குவதாக சொல்லும் பல ஆய்வுகளும் கூட வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக வழக்கமான ஊடக முறையை சமூக ஊடகத்தில் கட்ட விரும்பி, முடியாமல் திணறும் பல சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் இறுதி புகலிடமான 'பரபரப்பு' மற்றும் மஞ்சள் செய்திகள் முதலியவற்றில் தஞ்சம் அடைகின்றன. அதிக views-ம் shares-ம் வருமானமாகி விடுகையில் சமூக ஊடகத்தில் கொளுந்து விட்டு எரியும் பைனரி அரசியல்களை ஊதி பெருக்கப் படுகின்றன.

சரியான ஊடகவியல் புரிதல் கொண்டோர், ஒவ்வொரு தொழில்நுட்பம் சார்ந்தும் ஊடக வடிவம் மாறும் என்பதை புரிந்து, அதற்கேற்ப தகவமைத்து, புதிதாகி, செறிவான, நியாயமான, மக்களுக்கான செய்திகளை வழங்க முடியும். பிறவை 'இவர் செய்யும் காரியத்தை பாருங்களேன்' மற்றும் 'Whataboutery' பைனரி உரையாடல்களை மட்டுமே நிகழ்த்த முடியும். அவற்றின் விளைவாக உருவாகி வரும் வரலாற்றை பற்றி எந்த கவலையும் அவர்களுக்கு இருக்காது.

பைனரி சிந்தனைகளில் அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய பைனரிதன்மை ஊக்குவிக்கப்படுவதற்கு பின்னால் நிச்சயம் அரசியல் நோக்கம் உண்டு.

ஒரு பொய்யை, ஒரு திரிபை விதைத்து ஒரு பெரும் கூட்டத்தால் திரும்ப திரும்ப உரக்க பேச வைத்து அதையே உண்மையாக்கி ஒரு அரசியல் முடிவை நோக்கியே நகர்த்திவிட முடியும் என்பதற்கு ஹிட்லர் தொடங்கி நம்மூர் ஆர்எஸ்எஸ் வரை பல உதாரணங்கள் இருக்கின்றன.

உலக முதலாளித்துவம் ஒரு எதேச்சதிகார நவதாராளவாத அரசு வடிவத்தை எல்லா இடங்களிலும் புகுத்திக் கொண்டிருக்கிறது. ஒரே மொழியை கொண்ட, ஒரே வரியை கொண்ட, இன்னும் பல 'ஒரே'க்களை கொண்ட தங்கு தடையற்ற சந்தை அதற்கு தேவைப்படுகிறது. அதை செய்து கொடுப்பதற்காக பல குழுக்களை பல அரசியல் வெளிகளில் பல முகங்களுடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

'ஒரே'தன்மை என்பது இயற்கையானதல்ல என்பது எத்தனை உண்மையோ அதே அளவுக்கான உண்மைதான் சிந்தனை திறன் படைத்த மனிதனுக்கு 'பைனரி' சிந்தனை இயற்கையாக முடியாது என்பதும்.

வடிவங்களுக்கே மூன்று பரிமாணங்களை நாம் கொண்டிருக்கையில் நொடிதோறும் கொதித்தெழும் சிந்தனையை இரண்டு பரிமாணத்துக்குள் முடக்கிவிட முடியுமா என்ன?

அப்படி முடக்க முனைவது மனிதகுலத்துக்கே விரோதமானது!

Also Read: 'Work form Home' போய் 'Work from Pub'- இங்கிலாந்தில் ட்ரெண்டாகும் புதிய வேலை: என்னென்ன வசதிகள் தெரியுமா?