உணர்வோசை
ஞானம் என்பது வேறொன்றும் அல்ல புரிதலே.. அப்புரிதலே அறிவு, ஞானம், மனம், நிர்வாணம், சமநிலை!
பொதுவாய் புத்தர் தனித்தன்மை கொண்டவர் அல்ல. சமூகத்திடமிருந்து விலக்கிக் கொள்ளும் போக்கையும் அவர் கடைபிடித்ததில்லை. சமூகத்துடன் உரையாடவே விரும்பியவர். சமூகத்திடமிருந்து விலகி தன்னை ஓர் உயரத்தில் இருத்திக் கொண்டு பேசும் பிரசங்கி போன்ற இடத்தையும் கூட புத்தர் வரித்துக் கொண்டதில்லை. அவரின் போதனை புரிதலும் தெளிதலும் மட்டுமே.
புத்தர் கதைகள் பல உண்டு. புத்தரின் பெயரில் எழுதப்பட்ட பெளத்த கதைகளே என்றாலும் அவை கொடுக்கும் தீர்க்கம் பல சூழல்களுக்கு பொருந்தும். மிகப்பெரும் திறப்பை திறந்துவிடும். அப்படி ஒரு புத்தர் கதை உண்டு.
ஊர் ஊராக சென்று உபதேசம் செய்பவர் புத்தர். வெவ்வேறு வகையான வரவேற்புகள் கிடைக்கும். பார்ப்பனிய மனநிலையில் இருந்த சமூகத்துக்கு புத்தரின் உபதேசங்கள் உவப்பளிக்கவில்லை. அத்தகையானோர் விமர்சனம் என்ற பெயரில் பல அபத்தங்களை செய்திருக்கின்றனர். புத்தர் எளிய புன்னகையில் அவர்களை கடந்திருக்கிறார்.
ஒருமுறை புத்தரை பார்வையற்ற ஒருவர் எதிர்கொண்டார். இன்ன காரணம் என்றில்லாமல் புத்தரை எதிர்க்கும் நபர் அவர். ஆங்கிலத்தில் சொல்வோமே, for the sake of opposing என, அந்த பாணியில் எதிர்ப்பவர். புத்தரிடம் அவர் ஒரு கேள்வி கேட்டார்.
‘நிறம்’ அப்படின்னு நிறைய பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நிறம் எப்படி இருக்கும்னு எனக்கு சொல்லுங்க பார்ப்போம். அது இனிக்குமா, கசக்குமா? சுடுமா, சில்லென இருக்குமா? நறுமணம் கமழுமா, நாற்றம் அடிக்குமா? இனிமையாக கேட்குமா, நாராசமாக இருக்குமா? எங்கே, உங்க ஞானத்தை வச்சு எனக்கு புரிய வைங்க பார்ப்போம்!”
புத்தர் புன்னகைத்தார்.
பார்வையற்றவர் நிறுத்தவில்லை. ‘எனக்கு விளக்கற அளவுக்கு அறிவு இல்லையா... அப்போ நீங்க ஞானி கிடையாதுன்னு ஒத்துக்கிறீங்களா?’ என புத்தரை கோபமூட்டும் நோக்கோடு கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார்.
அருகில் நின்றவரிடம் புத்தர், ‘நல்ல மனிதராக இருக்கிறார். இவர் பார்வை பெறுவதற்கான சிகிச்சைகள் கிடைக்க உதவுங்களேன்’ என சொல்லிவிட்டு சென்றார்.
தன் கேள்விக்கு புத்தரிடத்திலேயே பதில் இல்லை என அளவுகடந்த பெருமை கொண்டார். புத்தர் கேட்டுக்கொண்டபடி எவர் அவருக்கு உதவ வந்தாலும் புறக்கணித்து ‘புத்தரை வென்றவன்’என தன் புகழ் பாடிக் கொண்டே வாழ்ந்து முடிந்தான். வாழ்க்கை முழுவதும் அவன் பார்வை பெறவே இல்லை. நிறம் எப்படி இருக்குமென்பதை அறியாமலே மடிந்தான்.
ஞானம் அடைந்தோருக்கு மட்டுமே இணக்கத்தின் அவசியம் தெரியும். ஞானம் என்பது வேறொன்றும் அல்ல, செல்வம், உறவு, புகழ் போன்ற உலகப்பூர்வமான விஷயங்களின் மீது பற்றுக் கொள்ளாமல் ஏற்படும் புரிதல்! அப்புரிதலே அறிவு, ஞானம், மனம், நிர்வாணம், சமநிலை, புத்தம் எல்லாமும்!
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!