உணர்வோசை

இருவரை ஒரே நேரத்தில் காதலிக்க முடியுமா..? அது எப்போது நிகழும்? அதன் ஆபத்துகளும் விளைவுகளும் என்ன ?

காதலுறவில் ஒரு வகை இருக்கிறது. Two Timing என்கிறார்கள். அதாவது ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கும் முறையை இப்படி பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இருவரை காதலிக்கலாமா?

காதலுக்கு அளவு இருக்கிறதா?

காதலின் அளவு என்பது நம்மை பொறுத்ததுதான். அதாவது நாம் பெறும் காதலென்பது நம் மனப்பான்மையை சார்ந்தது.

பெரிய அளவில் காதல் வெளிப்படுத்த முடியாத சூழல் கொண்ட வாழ்க்கையிலும் ஒருவர் காதலில் இருக்க முடியும். அபரிமிதமாக காதல் கிடைக்கும் சூழலில் காதல் போதவில்லை என்றும் ஒருவர் கருத முடியும்.

காதல் பெறுதல் என்பதற்கென தனிப்பயிற்சியை நம் மனங்களுக்கு இச்சமூகம் வழங்குவதில்லை. 'பெறுதல்' என்பதற்கு நெருக்கமான அனுபவமாக நமக்கு இருப்பது 'பொருட்கள் பெறுவது'தான். அதாவது நுகர்வு அனுபவம்.

பொருட்கள் பெறுதல், வாங்குதலை தோற்றுவிக்கிறது. வாங்குதல் தேடுதலை அடைகிறது. தேடுதல் வெறியை அளிக்கிறது. நுகர்வு, காதல், காமம் என எதுவாக இருந்தாலும் இதுவே வரிசைக்கிரமமாக உள்ளது.

பெறுதலையே பிரதானமாக மனம் நினைக்கும்போது கொடுத்தல் என்பதை பற்றி அது யோசிப்பதே இல்லை. கொடுத்தல் குறையும்போது பெறுதலும் இயல்பாகவே குறையும். கொடுத்தலும் பெறுதலும் கட்டாயமாகும்போது உறவு பரிவர்த்தனை ஆகிவிடுகிறது. எதிர்பார்ப்பு சுமையாகி விடுகிறது. அந்த சுமையை குறைக்க நம் மனநீர் மேட்டிலிருந்து சரிவை நோக்கி ஓடுகிறது.

ஆனால் ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

முதலாமவரின் காதலை காட்டிலும் இரண்டாமவரின் காதல் சிறப்பாக தெரிபவருக்கு நாளை மூன்றாவதாக ஒரு காதல் சிறப்பாக தெரியாது என்பது என்ன நிச்சயம்?

முதலாமவரின் காதலை அடையாளம் கொள்ள முடியாதவருக்கு எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் காதலை அடையாளம் காண முடியாதல்லவா?

'ஜானி' படத்தில் ரஜினி ஒரு வசனம் பேசுவார்.

"இந்த உலகத்துல எதை எடுத்தாலும் ஒண்ணை விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதுக்கு ஒரு முடிவே இல்ல. அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போகக் கூடாது"

அந்த வசனத்தின் அடிப்படையில் இருக்கும் உண்மையைத்தான் விளக்க முற்படுகிறேன்.

நாம் அனைவரும் முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். 'கட்டற்ற பாலுறவு' என்பதே இயற்கை என்கிற கற்பனை காலத்திலிருந்து நகர்ந்து, நுகர்தல்தான் இயற்கை என்கிற செயற்கை காலத்தை எட்டியிருக்கிறோம்.

மரம் தாவிய நம் வேட்டைக்கால மனங்களை இன்றைய நுகர்வுகால வேட்டையைப் பயன்படுத்தி ஏற்கனவே நமக்கான பொருளாதார பாதுகாப்பை நம் ஒப்புதலுடனே சீரழித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நுகர்வு வேட்டை நம் அந்தரங்க வாழ்வுக்கான தேர்வுகளையும் தீர்மானிக்க தூண்டுகையில் நம் மனதிடத்துக்கான பாதுகாப்பும் சீரழியும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே உங்களுக்கு விருப்பமிருந்தால் இருவரையும் காதலியுங்கள். ஆனால் அதற்கு முன் இரண்டு காதல்களை கேட்கும் உங்கள் மனநிலையை எது உருவாக்கியது என்பதை ஆராய்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் விருப்பம்தான்.

Do. Face the consequences!

Also Read: 'I LOVE YOU..' : காதல் என்பது என்ன? எப்படி அது தோன்றும்? தோன்றினால் என்ன நடக்கும்?