murasoli thalayangam
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மின்சார தட்டுப்பாடு... அடுக்கடுக்கான புகார்களோடு அம்பலப்பட்ட தவெக அரசு!
முரசொலி தலையங்கம்
15.10.2026
யூனிட்டுக்கு 35 ரூபாய்...
பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என்று பாடினார் விஜய். 'யூனிட்டுக்கு 35 ரூபாய்... யூனிட்டுக்கு 35 ரூபாய் என்று பாடலாமா?' என்று கேட்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. உண்மையில், 'யூனிட்டுக்கு 35 ரூபாய்' என்றுதான் பாட வேண்டும். இதுதான் தூயசக்தியின் ஆட்சி.
இதற்காகத்தான் திட்டமிட்டு மின்சாரத் தட்டுப்பாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். 'மின்சாரம் இல்லை' என்று மக்களைக் கதற வைத்துள்ளார்கள். ‘வெளிமார்க்கெட்டிலாவது வாங்கித் தரக்கூடாதா?' என்று அனைவரையும் கேட்க வைத்துள்ளார்கள். 'இதோ பார் வெளி மார்க்கெட்டில் வாங்கிவிட்டோம். அவர்கள் யூனிட்டுக்கு 35 ரூபாய் கேட்கிறார்கள்' என்று மக்களை நம்ப வைக்க முயற்சித்தார்கள். கொள்ளையோ கொள்ளையை பட்டவர்த்தனமாக நடத்தி விட்டு ஆந்திராவுக்கு நவராத்திரி விழா பார்க்க பட்டு வேட்டி சட்டையில் போய்விட்டார் முதலமைச்சர்.
“இந்த ஊழல் டீல் முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்குப் பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்.?” என்று கேட்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. வழக்கம் போல் இதற்கும் பதில் வரப் போவது இல்லை. காது கேட்காதது போல இருந்து காரியத்தை முடிக்கப் பார்க்கிறார்கள் முதலமைச்சர் விஜய்யும், மின் துறை அமைச்சர் - சர்வதேச சங்கியான நிர்மல் குமாரும்.
த.வெ.க. அரசு கையாலாகாத அரசாங்கம்தான் என்பதை முதலில் அம்பலப்படுத்தியது மின்வெட்டில்தான். “இந்த ஆட்சியில் ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே... ஒன்னு மின்வெட்டு! இன்னொன்னு அரிவாள் வெட்டு” என்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அந்தளவுக்கு விஜய் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் தொடங்கி விட்டது மின்வெட்டு.
மக்களை நிம்மதியாகத் தூங்க விடாமல் ஆக்கினார் விஜய். வீதிக்கு வந்து போராடினார்கள் மக்கள். மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டார்கள். சாலை மறியல் செய்தார்கள். ஆனாலும் அதற்கான தீர்வை அரசாங்கம் செய்யவில்லை. வாயைத் திறந்தாலே பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அமைச்சர் நிர்மல்குமார், தினமும் ஒரு காரணத்தைச் சொன்னார்.
* தி.மு.க.வினரால் மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது.
* மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒரு சில ஊழியர்களால் திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுகிறது.
* பியூஸ் கட்டையைத் திருடிச் சென்று விடுவதால் மின்வெட்டு ஏற்படுகிறது.
* மின் துறை ஊழியர்கள் மத்தியில் 1 விழுக்காடு ஊழியர்கள் கருப்பு ஆடுகள். அவர்களால் மின்வெட்டு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. •பி.எஸ்.என்.எல். கேபிள் பணிகளுக்காக தோண்டுவதால் மின் வெட்டு ஏற்படுகிறது - இவை அனைத்தும் அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன பொய்கள். மின்சார ஊழியர்கள் மீதே அத்தனை பழியையும் தூக்கிப் போட்டார் அவர்.
* காற்று அடிப்பது குறைவாக இருக்கிறது. அதனால் காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை” - என்று காற்றையே குறை சொன்னார் அமைச்சர் செங்கோட்டையன்.
* மழை குறைந்ததால் தண்ணீரில் இருந்து வரும் மின்சாரம் குறைந்திருக்கிறது. காற்று நின்று போனதால் அந்த மின்சாரமும் கிடைக்கவில்லை என்று மழையையும் காற்றையும் சேர்த்துக் குறை சொன்னார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இயற்கையே சதி செய்வதைப் போல பேசினார்கள். இந்த மாதிரி புத்திசாலிகளை எல்லாம் எங்கிருந்துதான் பிடித்தார்களோ! மொத்தப் பேரும் த.வெ.க.அமைச்சரவையில்தான் இருக்கிறார்கள். இது போன்ற கதைகளை விட்டு மக்களை திசை திருப்பிக்கொண்டே கொள்ளையடிப்பதில் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது மின் கொள்முதல் ஊழல்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொன்னார் விஜய். 'தி.மு.க. ஆட்சியில் இவர்களே திட்டமிட்டு மின் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள், அப்படிச் செய்தால் தான் வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ய முடியும், கொள்ளை அடிக்க முடியும்' என்று பேசினார் விஜய். அன்று அவர் சொன்னதைத்தான் இன்று அவர் செய்து கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை மிகமிக அதிக விலைக்கு வாங்க இருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் செயலைச் செய்ய இருக்கிறார்கள். இதன் நோக்கம் கொள்ளை தானே?
இதைவிடக் குறைவான விலைக்குத்தான் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? புதிய ஒப்பந்தங்கள் போட்டு கொள்ளை அடிப்பதற்காகத் தான் பழைய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதா?
மின் உற்பத்தியைஅதிகரிக்கும் புதிய திட்டங்கள் போடப்பட்டுள்ளதா? இல்லை. மாறாக, வெளிச்சந்தையில் வாங்குவதை அதிகப்படுத்துகிறார்கள். அதுவும் மிகமிகமிக அதிக விலையில் வாங்க இருக்கிறார்கள். எந்த விலையில் வாங்கப் போகிறார்கள் என்பது மட்டும்தான் இப்போது அம்பலம் ஆகி உள்ளது. இதற்குள் நடந்த பேரங்கள் இனி வரிசையாக அம்பலம் ஆகும்.
உபரியாக இருந்த மின்சாரத்தை விற்பனை செய்தது திராவிட மாடல் அரசு. வெளிச்சந்தையில் அநியாய விலைக்கு வாங்கப் போகிறது இந்த திருட்டு சக்தி அரசு.
மாட்டிக் கொண்டதும், 'இது அக்டோபருக்கு மட்டும்தான்' என்று முழிக்கிறார் நிர்மல்குமார். 'ஒரு மாதம் மட்டும் ஊழல் செய்துகொள்கிறோம்' என்று அனுமதி கேட்கிறாரா அமைச்சர்?
தி.மு.க. ஆட்சியில்ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய போது, 'மின்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்' என்று சொன்னவர்தான் இன்றைய மின்துறை அமைச்சர் நிர்மல்குமார். இப்போது யூனிட் விலை 35 ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போட்டுமாட்டிக் கொண்டார்கள் என்றால் அமைச்சர் நிர்மல்குமார் மட்டுமல்ல, முதலமைச்சர் விஜய்யும் சேர்ந்து பதவி விலக வேண்டாமா?
Also Read
-
“SIR-ஐ எதிர்த்தது யார்? ஒளிந்தது யார்?...” அம்பலமாகும் தவெக நாடகம்.. - வெளுத்து வாங்கிய ரகுபதி!
-
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கு : கைதிகளை வைத்து தாக்க சொன்ன போலீஸ்... அடுத்தடுத்து அதிர்ச்சி !
-
வாக்கு எண்ணிக்கை வீடியோவை காணவில்லை என எப்படி கூற முடிகிறது? : தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் காட்டம்!
-
“இனி நீதிமன்றங்கள் முன்புதான் மக்கள் போராடுவார்கள்” : சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது என்ன?
-
அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவது ஏன்? : த.வெ.க அரசுக்கு மு.வீரபாண்டியன் கேள்வி!