murasoli thalayangam

யார் திறந்து வைத்தாலும், மெட்ரோ கனவை நிறைவேற்றியது கலைஞரும், தி.மு.க தலைவரும் தான்! - முரசொலி தலையங்கம்!

சென்னை மெட்ரோ - 2 திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. உண்மையில் அதனைத் திறந்து வைக்கும் முழுத் தகுதி படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.

பூந்தமல்லி - போரூர் வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் ( திட்டம் 2) என்பது முழுக்க முழுக்க திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சென்னை மக்களுக்குச் செய்து கொடுக்கப்பட்ட மாபெரும் கொடையே ஆகும்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சென்னை மக்களுக்கு மிக வசதியான போக்குவரத்துத் திட்டங்களைத் தரவும் உருவாக்கப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம் ஆகும். இது தி.மு.க. ஆட்சியில் உருவானது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதற்கான விதை போடப்பட்டது.

மெட்ரோ - 1 என்ற திட்டத்துக்காக அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் உத்தரவின் பேரில் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் அதிகாரிகளும் 7.2.2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் (Japan International

Co-Operation Agency) பேச்சுவார்த்தை நடத்தி நிதியுதவி பெற்றார்கள். அதன் அடிப்படையில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2.11.2008 அன்று ஒன்றிய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்தானது. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி 41 சதவிகிதம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி 59 சதவிகிதம் என்று அந்தத் திட்டம் உருவானது.

இன்றைக்கு சென்னை மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க காரணம் தலைவர் கலைஞரும், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான்.

இந்த அடிப்படையில் தான் மெட்ரோ 2 என்ற திட்டம் உருவானது. இதற்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிந்தவரையில் டிமிக்கி கொடுத்து வந்தது.

மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் நிதி ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசும், மாநில அரசும் 50 : 50 விழுக்காடு பங்கிட்டுத் தர வேண்டும். இந்தத் திட்டத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி செலவாகும். இதற்கான ஒப்புதலையும் தராமல் இருந்தது ஒன்றிய அரசு.

மாநில அரசு செலவு செய்வதற்கான நிதியைத் திரட்ட பன்னாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுமதியும் தரவில்லை. தி.மு.க. அரசு ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. ஒன்றிய அரசின் நிதி வரவில்லை என்றால் இந்தத் திட்டத்தை முழுமையாக மாநில அரசின் நிதியில் இருந்து தான் செயல்படுத்த வேண்டும்.

ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் கோடியை இதற்காக ஒதுக்கினால் தான் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி முடிக்க முடியும். இப்ப-=டிப்பட்ட நெருக்கடியில் தள்ளியது ஒன்றிய அரசு.

கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், 2024 செப்டம்பர் நிலவரப்படி, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து 11,762 கோடி ரூபாயும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடனுதவி மூலம் ரூ.6,802 கோடி என மொத்தம் 18,564 கோடி ரூபாயைச் செலவிட்டு திராவிட மாடல் ஆட்சியில் இரண்டாம் கட்டப் பணிகளை நிறுத்தாமல் தொடரப்பட்டது. அதனால்தான் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் நிலைக்கு வந்தது. இல்லாவிட்டால் அப்படியே மூடப்பட்டு இருக்கும்.

* சென்னை மெட்ரோ இரயில் திட்டம் - 1 நிறைவேற்றியதும் தி.மு.க. அரசே!

* சென்னை விமான நிலையம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் - கோயம்பேடு புறநகர்ப் பேருந்து முனையம் எனச் சென்னை யின் முக்கியமான போக்குவரத்து மையங்களை ரயில் மூலமாக இணைத்ததும் தி.மு.க. அரசே!

* சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பணிகளை 2021 ஆம் ஆண்டு விரைவுபடுத்தியதும் தி.மு.க. அரசே!

* மூன்று ஆண்டு காலமாக நிதியே கொடுக்காமல் வைத்திருந்த ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி நிதி கொடுக்க வைத்ததும் தி.மு.க. அரசே!

* ஒன்றிய அரசு பணம் தராவிட்டால் என்ன என்று நினைத்து மாநில அரசின் நிதியை ஒதுக்கியதும் தி.மு.க. அரசே!

* மெட்ரோ திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் முதலமைச்சராக இருந்தபோது ஆய்வு செய்து வந்தார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

* இதன் அடுத்த கட்டமாக மூன்றாம் கட்ட மெட்ரோ விரிவாக்கப் பணிகளையும் திட்டமிட்டது திராவிட மாடல் ஆட்சி. இவையும் செயல்படுத்தப்பட்டால் அதிகப்படியான மெட்ரோ ரயில் ஓடும் நகரமாக சென்னை உயரும்.

* சென்னையைப் போலவே கோவை, மதுரை நகரங்களிலும் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த போது திட்டமிட்டு அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பி வைத்தார். அதனை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

செயல்படுத்தமுடியாது என்று சொல்லி விட்டது. திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திருந்தால் அதனையும் ஒன்றிய அரசிடம் தொடர் வலியுறுத்தலைச் செய்து செயல்படுத்த வைத்திருப்பார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“ஆண்டுக்கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ இரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன்" என்று அவர் அறிக்கை வெளியிட்டு இருப்பது முழுமையான உண்மை ஆகும்.

யார் திறந்து வைத்தாலும், யார் வேடிக்கை பார்த்தாலும் சென்னை மெட்ரோ ரயில் கனவை நிறைவேற்றித் தந்தது தமிழினத் தலைவர் கலைஞரும், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலினும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகளுமே!

இது பிரதமர் மோடிக்குத் தெரியும். அதனால் தான் தனது உரையில் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

Also Read: “ஊழல் Deal முடிக்க பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கும் பஞ்ச் டயலாக் CM” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!