murasoli thalayangam
‘காமராஜரைப் போற்றிய திமுக..’ இரண்டு அமைச்சர் பதவிக்காக எத்தனை பொய் வேடம் - காங்கிரசை கண்டித்த முரசொலி!
காமராசர் மறைவின் போது...?
“காமராசர் மறைவின் போது மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம். கிடைக்கவில்லை. அப்போதும் சிரித்த முகத்துடன் நாங்கள் அதைக் கடந்து சென்றோம்” என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரகை கத்பர்ட், சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
எத்தனை தடவை விளக்கம் அளித்தாலும், உண்மைகளைத் தெளிவுபடுத்தினாலும் சிலர் பழைய பொய்களையே திரும்பத் திரும்பப் பேசுவார்கள். அத்தகைய பொய்களில் ஒன்று தான், 'மெரினாவில் பெருந்தலைவர் காமராசர் உடலை அடக்கம் செய்ய இடம் தரவில்லை' என்பது ஆகும். இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரஸ் கட்சி தினமும் எத்தனை பொய் வேடங்கள் போட வேண்டி இருக்கிறது? ‘முரசொலி” தலையங்கத்திலும் இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு 1975 அக்டோபர் அன்று தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான கே.ராஜாராம் (நாயுடு) அவர்கள் ஆற்றிய உரையைப் படித்தால் முழு உண்மையும் அறியலாம்.
“பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சாதாரண தொண்டராக இருந்த காலத்திலிருந்து எனக்கும் அவருக்கும் நட்பு உண்டு. அவரும் நானும் பல கிராமங்களுக்கு கால்நடையாகவே சென்று பேசியிருக்கிறோம்” என்ற பீடிகையுடன் தொடங்கும் கே.ராஜாராம் அவர்கள், பெருந்தலைவர் மறைந்த அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்....
”அக்டோபர் 2 இரவில்... பெருந்தலைவர் காமராசர் மறைந்த அன்று, நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் கலைஞர் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும், மற்ற அமைச்சர்களும் உடனே அவரது வீட்டுக்குச் சென்றனர். தங்களின் சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதைப் போல, அந்த இடத்தில் அவர்கள் இருந்தார்கள். 'மற்றொரு கட்சித் தலைவர் இறந்துவிட்டார்' என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை.
முதலமைச்சர் அவர்கள் எங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு துக்கம் தாளாது அழுதார். என்னுடைய உயிர் உள்ள வரை இது மறக்க முடியாது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர் காட்டினார். காமராசர் அவர்களிடம் இருந்து எப்படி இந்த பாச உணர்ச்சியை அவர் பெற்றார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழக ஆளுநர் அவர்களும் முதலமைச்சர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராசருடைய பிரேதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அங்கேயே எரித்து, நினைவுச்சின்னம் கட்டுவது என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது.
'காமராசரின் உடலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுபோய் வைக்க வேண்டும். முதலமைச்சரிடம் அனுமதி கேளுங்கள்' என்று சிலர் சொன்னார்கள். எப்படி அனுமதி கேட்பது என்று யோசித்த விநாடியே முதலமைச்சர் அவர்கள், காமராசர் வீட்டுக்கே வந்துவிட்டார்.
'இங்கே கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. உடனே ஐயாவை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுபோக வேண்டும்' என்றார்.
நாங்கள் கனவு கண்டதைப் போல, நாங்கள் எதிர்பார்த்ததைப் போல முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். எங்கள் மனதில் உள்ளதை எப்படி அவர் தெரிந்து கொண்டார் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களுக்கும், எனக்கும், என்னுடைய சகாக்களுக்கும் என்ன கைம்மாறு செய்வது என்றே புரியவில்லை.
காமராசரின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வந்து, பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, தலைவர்கள் அமர மேடை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில், 'மந்திரிசபை இங்குதான் கூடுகிறதோ?' என்கிறவகையில் எல்லா அமைச்சர்களும் அங்கே வந்துவிட்டார்கள். காமராசர் உடலை எங்கு வைத்து எரிப்பது? அடுத்தடுத்த காரியங்கள் என்ன? நாங்கள் எல்லாம் கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்தோம். 'கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் எரிக்க வேண்டும்' என்று முதலமைச்சர் அவர்களே சொன்னார்கள்.
அன்று இரவு எட்டு மணிக்கு, கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய காரில் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி காரியதரிசியையும் என்னையும் அழைத்துக்கொண்டு கிண்டி காந்தி மண்டபம் சென்றார்.
வெளிச்சம் இல்லாத அந்த இடத்தில், நாங்கள் சென்ற கார்களைத் திருப்பி நிறுத்தி அதன் விளக்கு வெளிச்சத்தில் இடத்தைத் தேர்வு செய்தார். இதை அதிகாரிகளே செய்யலாம். ஆனால் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய நேரடி பார்வையில் இவற்றையெல்லாம் செய்தார்கள்.
அனைத்து அமைச்சர்களும் இரவெல்லாம் தூக்கமில்லாமல் அங்கு அடர்த்திருந்த மரங்களை, புதர்களை அகற்றி, தகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்கள் கட்சிகாரர்களுக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இதை என்றுமே மறக்க முடியாது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசிடமிருந்து அப்படியொரு அரசு மரியாதையை நாங்கள் எதிர்பார்க்க வில்லை.” (முரசொலி, 24.10.1975) என்று பேசி இருக்கிறார் கே.ராஜாராம் அவர்கள். இது எல்லாம் தாரகை கத்பர்ட் போன்றவர்களுக்கு தெரியாது.
பெருந்தலைவரைப் போற்றி திராவிட முன்னேற்றக் கழக அரசுகள் காலத்தில் செய்தவை, தனித் 'தலையங்கம்' தீட்டும் அளவுக்கு மிக மிக நீண்டவை. இவை நன்றியுள்ள காங்கிரஸ்காரர்கள் அறிவார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களாக வருகிறவர்கள் இதை எல்லாம் படித்துப் பார்த்து விட்டு வர வேண்டும். தி.மு.க. தயவில் சட்டமன்ற உறுப்பினர் ஆனோம் என்ற நன்றி உணர்ச்சிகூட இல்லாமல், த.வெ.க. அரசுக்கு அற்ப சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்காக இது போன்ற பொய்களைப் பேசி சட்டமன்றப் பதிவேட்டில் தங்களது துரோக நடவடிக்கைகளை பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது.
Also Read
-
ஓடிப்போய்விட்டார் : பேரவையில் த.வெ.க அரசின் முகத்திரையை கிழித்த எதிர்க்கட்சி தலைவைர் உதயநிதி ஸ்டாலின்!
-
வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது : என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
-
உங்கள் மனதில் எவ்வளவு சாதிய வன்மம் : காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு திமுக ஐடி விங் கடும் கண்டனம்!
-
டெல்டா மாவட்டங்கள் குறித்து கொஞ்சமாவது முதலமைச்சர் விஜய்க்கு கவலை இருக்கிறதா? : முரசொலி கடும் கண்டனம்!
-
“DMK 2.0-விற்கான பயணம் தொடங்கியது” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!